

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை மிரட்டியதாக சவுக்கு சங்கருக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் மீண்டும் புதிதாக சம்மன் அனுப்பி விசாரி்க்க உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், அவருக்கு எதிராக எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் அறிவறுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சவுக்கு சங்கர் தூண்டுதலின்பேரில் கடந்த ஜூலை மாதம் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை 3 பேர் மிரட்டியதாக ஏழுகிணறு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்திருந்த மனு, உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.வெற்றிவேல் ஆஜராகி, “இது, சவுக்கு சங்கரை பழிவாங்கும் நோக்கில் பொய்யான குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள போலியான வழக்கு. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார்.
பதிலுக்கு காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், “மனுதாரருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பப்பட்ட சம்மனைக்கூட மனுதாரர் வீடியோவாக யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளார். விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை” என்றார்.
அதையடுத்து நீதிபதி, மனுதாரரான சவுக்கு சங்கர் போலீஸாரின் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். அவருக்கு மீண்டும் புதிதாக சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும். அதேநேரத்தில், அவருக்கு எதிராக எந்தவொரு கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கக்கூடாது என உத்தரவி்ட்டு விசாரணையை 4 வார காலத்துக்கு தள்ளிவைத்துள்ளார்.