

கோவை: குடியரசு துணைத் தலைவர் கோவை வருகையின் போது பாதுகாப்பு பணியில் நடைபெற்ற குளறுபடியை கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாஜக சார்பில் காவல் துறை தடையை மீறி கோவை சிவானந்தா காலனி பகுதியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் காவல் துறைக்கு எதிராக கோஷமிட்டனர்.
பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் கூறும் போது, குடியரசு துணைத் தலைவர் கோவை வருகையின் போது, டவுன்ஹால் பகுதியில் அத்துமீறி பாதுகாப்பு வளையத்திற்குள் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் மீது உரிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. சாதாரண பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநில தலைவர் தலைமையில் கோவையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் மீது கலவரத்தை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கை காவல் துறை விசாரிப்பது சரியாக இருக்காது. தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை தெரிய வரும் என்றார். காவல் துறை அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.