

சென்னை: கோயில் நிலங்கள் குறித்து ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் முறைகேடாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை தெளிவுபடுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்கள் தொடர்பான டெண்டர்கள், ஒப்பந்தங்கள் நிலங்கள் தொடர்பான பதிவேடுகள் உள்ளிட்டவற்றை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்து அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிடக் கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது .அப்போது இந்து அறநிலையத் துறை சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன், ஆஜராகி கோயில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் முறைகேடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் ஏற்கெனவே வருவாய் துறையின் தமிழ் நிலம் என்ற இணையதளம் உள்ளதாகவும் அந்த இணையதளத்தில் நிலத்தின் வகைப்பாடு குறித்து அனைத்து விவரங்களும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தயாராக உள்ளதாகவும் ஏற்கெனவே முதல் அமர்வு முன்பு இதேபோல் தொடரப்பட்ட வழக்கு உள்ளதாகவும் சுட்டிகாட்டினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி கோயில் தொடர்பான விவரங்களை வெளியிட என்ன தடை இருக்கப் போகிறது? இது தொடர்பாக ஒரு முறையான திட்டம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 12-ம் தேதி ஒத்திவைத்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.