

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்காக, வட்டார அளவில் மாதம் ஒருமுறை குறைதீர் கூட்டங்களை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடிக்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.பாஸ்கர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: நிலமற்ற, கிராமப்புற ஏழை மக்களின், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் இருந்து வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஏராளமான குறைகள் உள்ளன. வேலை செய்த நாட்களுக்குரிய ஊதியத்தை கணக்கிடுதல், செய்த வேலையின் அளவை விட மிகக் குறைவாக ஊதியம் தருதல், குடியிருக்கும் இடத்திலிருந்து பணியிடம் அதிக தொலைவில் அமைவது, என்எம்எம்எஸ், ஏபிபிஎஸ் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் பிரச்சினைகள், மற்றும் ஊதியத் தொகை வங்கிக் கணக்கில் சேராமல் இருப்பது, வங்கிகள் பிற கடன்களுக்காக தொழிலாளர்களின் ஊதியத்தை எடுத்துக்கொள்வது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
இத்தகைய குறைகளைத் தீர்க்க ஒவ்வொரு மாவட்டத்திலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர்களின் செயல்பாடு ஏட்டளவில் மட்டுமே உள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு எந்தப் பயனுமில்லை. கர்நாடக மாநிலத்தில் வேலை உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளர்களின் குறைகளை அறிந்து தீர்ப்பதற்காக குறைதீர்க்கும் கூட்டத்தை அம்மாநில அரசு நடத்துகிறது.
அதேபோல் தமிழக அரசும் மாதம் ஒருமுறை ஒவ்வொரு வட்டார அளவிலும், சுழற்சி முறையில் மையங்களை திட்டமிட்டு குறைதீர் கூட்டங்களை, வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது வேலை உறுதியளிப்பு திட்ட அலுவலரைக் கொண்டு நடத்த வேண்டும். சி - வலை அட்டை பெற்றுள்ளவர்களும், அவர்களது தொழிற்சங்க பிரதிநிதிகளும் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதை உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.