கரூரில் குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த புள்ளி மான் மீட்பு: வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது

கரூரில் குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த புள்ளி மான் மீட்பு: வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது
Updated on
1 min read

கரூர்: கரூரில் குடியிருப்புப் பகுதியில் சுற்றி திரிந்த புள்ளி மானை அங்கிருந்த தையல் தொழிற்கூடத்தில் வைத்து பொதுமக்கள் பாதுகாத்த நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், வனத்துறையிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றனர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரத்தில் குடியிருப்புப் பகுதிகளில் அதிகாலை 3 மணியளவில் புள்ளி மான் ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. அப்பகுதியில் தெரு நாய்கள் மானை விரட்டியதால் அங்கிருந்த தையல் தொழிற்கூடத்தின் உள்ளே சென்று நின்று கொண்டது.

இதனைப் பார்த்த பொதுமக்கள் ஷெட்டில் இருந்து மான் வெளியே வராமல் இருக்க மறைப்புகளை ஏற்படுத்தினர். பின்பு, தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் மானை லாவகமாக பிடித்து அதன் கண் மற்றும் கால்களை பிடித்து கட்டி வாகனத்தில் ஏற்றி தீயணைப்பு நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

அவர்களிடமிருந்து வனத்துறையினர் பெற்றுச் செல்வதாகக் கூறினர். கடந்த 1 மாத காலமாக இந்தப் புள்ளி மானை வெண்ணைமலை பகுதியில் பொதுமக்கள் பார்த்த நிலையில் தற்போது கரூர் நகரில் குடியிருப்புப் பகுதியில் சிக்கியது. வனமே இல்லாத கரூர் நகரில் புள்ளி மான் பிடிபட்டது பார்ப்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in