‘காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு கதறி அழுதார் விஜய்’ - மாமல்லபுரத்தில் நடந்தது என்ன?

‘காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு கதறி அழுதார் விஜய்’ - மாமல்லபுரத்தில் நடந்தது என்ன?
Updated on
1 min read

கரூர்: தவெக தலைவர் விஜய் தங்களிடம் மன்னிப்பு கேட்டதுடன், காலில் விழுந்து கதறி அழுததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிலர் தெரிவித்தனர்.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை, தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் நிகழ்ச்சி, மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது. இதற்காக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் 7 ஆம்னி பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து, நேற்று தவெக தலைவர் விஜய் விடுதிக்கு வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அவர்கள் அனைவரும் பேருந்துகள் மூலம் இன்று அதிகாலை கரூர் வந்தடைந்தனர்.

இந்தச் சந்திப்பு குறித்து, கூட்ட நெரிசலில் மனைவி ஹேமலதா, மகள்கள் சாய்லக்‌ஷனா, சாய்ஜீவா ஆகிய 3 பேரை இழந்த கரூர் சிவசக்தி நகர் ஆனந்த ஜோதி கூறும்போது, “விஜய் எங்களை சந்தித்தபோது, என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து மன்னித்து விடுங்கள் எனக் கூறி என் தாய் கிருஷ்ணவேணி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

உங்களுக்கு உதவிகள் ஏதும் தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள். எந்த உதவியாக இருந்தாலும் நான் செய்து தருகிறேன் என்றார். குழந்தைகளை அழைத்து வரவேண்டாம் என்று கூறியபோதும், குழந்தைகள் உங்களை காணவேண்டும் என்ற ஆசையால் அழைத்து வந்துவிட்டோம் எனக் கூறி அவரிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டோம்.

மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கிய எனது மகளை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றததாலும், அங்கு சிகிச்சை அளிக்க தாமதமானதாலும் இறந்துவிட்டதாக விஜய்யிடம் தெரிவித்தோம். அதற்கு அவர், சிபிஐ விசாரணை மேற்கொள்ளும்போது தெரிவியுங்கள் என்று கூறினார்” என்றார்.

மனைவி பிரியதர்ஷினி, மகள் தரணிகாவை ஆகியோரை பறிகொடுத்த கரூர் ஏமூர்புதூரை சேர்ந்த சக்திவேல் (55) கூறும்போது, “நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டு, நடிகர் விஜய் எனது காலில் விழுந்து கதறி அழுதார். என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். கரூருக்கு நேரில் வர முடியாததற்கு மிகவும் வருந்துகிறேன். கரூருக்கு வரும்போது அனைவரையும் சந்திக்கிறேன் எனக் கூறினார்” என்றார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிலர் கூறும்போது, “கரூர் சம்பவத்துக்கு முன்பு நல்ல திடகாத்திரமாக இருந்த விஜய், தற்போது உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டார். எப்போதும் உங்களில் ஒருவனாக இருந்து உங்கள் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பேன். குழந்தையின் படிப்பு செலவு, திருமண செலவு போன்ற எந்த செலவுகள் குறித்து கேட்டாலும் உடனே அதற்கு உதவி செய்ய தயாராக இருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in