

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா வரும் 2-ம் தேதி புதிய கட்சி தொடங்குகிறார்.
சென்னையில் நேற்று அவர் கூறியதாவது: தன் மகனின் அரசியலுக்காக மதிமுகவில் இருந்து வைகோவால் தூக்கி வீசப்பட்டோம். கருத்தியல் ரீதியாக இயங்க வேண்டும் என்ற உணர்வோடு தனியாக ஒரு இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதால் நவம்பர் 20-ல் புதிய கட்சி தொடங்க உள்ளோம். மதவாத சக்திகள் கை ஓங்கிக் கொண்டு வரும் இந்தக் காலகட்டத்தில், எங்களுடைய சிறிய சக்தியை திராவிட இயக்கத்துக்கு ஆதரவாக நிறுத்த வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு நல்லாட்சியைத் தந்துகொண்டிருக்கிறார். நாங்கள் திமுகவுக்கு ஆதரவாக நிற்போம். 2026-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பதற்கு நாங்கள் துணை இருப்போம்.
வாய்ப்பு கிடைத்தால் தேர்தல் களத்தில் போட்டியிடவும் தயாராக இருக்கிறோம். புதிய இயக்கத்தின் பெயர் மற்றும் கொடி ஆகியவை நவம்பர் 20ம் தேதி சென்னையில் அறிவிக்கப்படும். இத்தனை ஆண்டுகள் சரியான வழியில் சென்று கொண்டிருந்த மறுமலர்ச்சி திமுக தற்போது மகன் திமுகவாக மாறிவிட்டது. இயக்க தலைவர் இயக்கத் தலைவராக இல்லாமல் குடும்பத் தலைவராக சுருங்கி விட்டார். துரை வைகோவுக்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்க விருப்பமில்லை. அவர் பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டு மத்திய அமைச்சர் பதவியை பெற வேண்டும் என்றஎண்ணத்தோடு இருக்கிறார். புதிய கட்சி தொடங்கும் எங்களை மகனைக் கடந்து வைகோ மானசீகமாக வாழ்த்துவார் என நம்புகிறோம் என்றார்.