

பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் ஏரியில் குப்பை, கழிவுநீர் கொட்டுவதை தடுக்க வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லாவரம் அருகே திருநீர் மலை பேரூராட்சியில் தினமும் 8 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குறைந்த அளவே திடக்கழிவு மேலண்மை செய்யப் படுகிறது. பெரும்பாலான குப்பை கள் சுடுகாடு மற்றும் திருநீர்மலை பெரிய ஏரி, கல்குவாரியில் கொட் டப்படுகிறது. ஏரியில் கொட்டக் கூடாது என பொதுமக்கள் சார்பில் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேபோல் வீடுகளில் கழிவுநீர் எடுக்கும் லாரிகள் கழிவுகளை ஏரியில் கொட்டுகின்றன. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. நெமிலிச்சேரி ஏரியில் இருந்து அப்புறப்படுத்தும் மண் திருநீர் மலை அருகே திருமங்கை ஆழ்வார் புரம் பகுதியில் கொட்டப்படுகிறது. இதுதொடர்பாக பல துறைகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த தினகரன், விக்ரம், பிரபாகரன் ஆகியோர், இந்தச் சம்பவத்தை கண்டித்து நேற்று காலை 7:30 மணியளவில் அங்குள்ள செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சங்கர் நகர் போலீஸார் மற்றும் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி ஆகியோர் அவர்களிடம் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உங்கள் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதை அடுத்து அவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னார் தாம்பரம் தீய ணைப்பு துறையினர் டவரில் இருந்தவர்களை பத்திரமாக கீழே இறக்கினர். இதில் தினகரன் என்பவர் மயக்கமடைந்தர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கழிவு நீர் லாரி ஓட்டுநர் ஆரோக்கியசாமியிடம் சங்கர் நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.