

மதுராந்தகம்: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், 123 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.
மேலும், கனமழை காரணமாக ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில், செங்கல்பட்டு அடுத்த பாலாற்றில் நீரோட்டம் ஏற்பட்டுள்ளதால், வல்லிபுரம் மற்றும் வாயலூர் பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி உபரிநீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது.
மேலும், மாவட்டத்தில் நீர்வளத் துறை பராமரிப்பில் உள்ள 528 ஏரிகளில், 51 ஏரிகள் 100 சதவீதமும், 79 ஏரிகள் 75 சதவீதமும், 153ஏரிகள் 50 சதவீதமும், 85 ஏரிகள் 25 சதவீதத்துக்கும் மேல் நிரம்பியுள்ளன. இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 72 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
மேலும், 56 ஏரிகள் 75 சதவீதமும், 136 ஏரிகள் 50 சதவீதத்துக்கும் மேல் நிரம்பியுள்ளன. இதுதவிர, முக்கிய ஏரிகளான தாமல், உத்திரமேரூர், மருத்துவம்பாடி, தைப்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும், கனமழை தொடர்ந்து பெய்தால் சில ஏரிகள் விரைவாக நிரம்பும் நிலை உள்ளது. முழுமையாக நிரம்பியுள்ள ஏரிகளின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.