

பாஜக சார்பில் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ள அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் ஊராட்சியில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தினார்.
இதில், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவித்தனர். மேலும், விசுவக்குடி அணை வாய்க்காலை சீரமைக்க வேண்டும். தண்ணீர் வரத்து வாய்க்காலை அகலப்படுத்த வேண்டும். செந்துறையை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். வேப்பந்தட்டை வட்டம் எளையூர் கிராமத்தில் பொருளாதார சிறப்பு மண்டலம் அமைக்க வேண்டும். நரிக்குறவர்களுக்கு வழங்க வேண்டிய பட்டா நிலங்களை அளவீடு செய்து வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
அந்த மனுக்களை வாங்கிய நயினார் நாகேந்திரன், “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும். அப்போது, உங்களின் கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்றப்படும்” என்று உறுதியளித்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, “மனு அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்த்தால், ஆட்சி மாற்றம் வந்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகிறாரே?” என கூறியபடி மக்கள் கலைந்துசென்றனர்