

உயர் நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை - சேலம் 8 வழிச் சாலைக்காக சம்பந் தப்பட்ட நில உரிமையாளர்களை அவர்களின் நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தருமபுரியைச் சேர்ந்த நில உரிமையாளரான பி.வி. கிருஷ்ணமூர்த்தி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘சென்னை - சேலம் பசுமைவழிச் சாலை திட்டத்துக்காக பாப்பிரெட்டி பட்டியில் எங்களுக்கு சொந்தமான நிலத்தை ஆர்ஜிதம் செய்து கைய கப்படுத்த டிஆர்ஓ உத்தரவிட் டுள்ளார். இதுதொடர்பாக அரசா ணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சேலம் சென்னை பசுமைவழிச் சாலை திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள் ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனவியல் சூழல் குறித்து உரிய ஆய்வு செய்யாமல் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. அத்துடன் பாதிக்கப்படும் மக்களிடமும் உரிய ஆட்சேபங்களை பெறவில்லை. இது சட்டவிரோதமானது. எனவே, இத்திட்டத்துக்காக எங்களின் நிலத்தை ஆர்ஜிதம் செய்ய பிறப் பிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்வதுடன், இந்த திட்டத்துக் கும் தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.
இதேபோல தருமபுரி எம்பி அன்புமணி ராமதாஸ் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்த தாவது:
ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் சென்னை சேலம் 8 வழி விரைவு பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ண கிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் 2,791 ஹெக்டேர் நிலங்களை அரசு கையகப்படுத்தி யுள்ளது. ஆனால் இந்த திட்டத்துக்கு 1,900 ஹெக்டேர் நிலங்களே போது மானது எனும்போது கூடுதல் நிலங்கள் எதற்காக கையகப்படுத் தப்பட்டுள்ளது என்பதை அதி காரிகள் தெளிவுபடுத்தவில்லை. 120 ஹெக்டேர் நிலங்கள் வனப் பகுதியில் கையகப்படுத்தப் பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி 277.3 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட வுள்ள இப்பாதையில் 3 குகைப் பாதைகள், 23 பெரிய பாலங்கள், 156 சிறுபாலங்கள், 578 கல்வெட்டுகள், 8 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதனால், 10 ஆயிரம் பாசன கிணறுகள், 100 குளங்கள், 6 ஆயிரம் தென்னை, பாக்கு மரங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும். தவிர 1 லட்சத்து 20 ஆயிரம் மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட உள்ளன. 22 கி.மீ. தொலைவுக்கு அடர்ந்த வனப்பகுதி வழியாக இப்பாதை அமைக்கப்பட உள்ளதால் சுற்றுச்சூழலுக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
சேர்வராயன், கல்ராயன் என 8 மலைகள் இதனால் பாதிக்கப்படும். குறிப்பாக 5 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் சொல்ல முடியாத துயரங்களை அனு பவிக்க நேரிடும். இந்த திட்டத் துக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங் களைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு களைத் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே சென்னையில் இருந்து சேலம் செல்வதற்கு திண்டிவனம், உளுந்தூர்பேட்டை வழியாக ஒரு பாதையும், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி வழியாக மற்றொரு பாதையும் தற்போது பயன்பாட்டில் உள்ளன. நிபுணர்கள் குழுவை அமைத்து அந்த 8 வழிச் சாலை திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். எனவே, 8 வழிச் சாலை திட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்து அதற்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே சேலத்துக்கு உள்ள 2 பாதைகளை யும் அகலப்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் அன்புமணி கோரியிருந்தார்.
மேலும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுந்தர்ராஜன், பாதிக்கப்பட்ட விவசாயிகள் என மொத்தம் 46 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்ப ராயன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று நடந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப் பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்டோர் ஆஜராகி, இத்திட்டத் துக்கு எதிராக கடந்த சுதந்திர தினத் தன்று கிராம சபை கூட்டங் களில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் மீது தடியடி நடத்தி துன்புறுத்தப் பட்டுள்ளதாகவும், மனஅழுத்தத் தில் உள்ள விவசாயிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் வாதிடப் பட்டது.
மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜ கோபாலன், அரசு தலைமை வழக் கறிஞர் விஜய் நாராயண் உள்ளிட் டோர் ஆஜராகி, இதுதொடர்பாக துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரு கிறோம் என தெரிவித்தனர்.
அதை படித்துப் பார்த்த நீதிபதி கள், ‘‘இந்த துண்டுபிரசுரங்கள் பொதுமக்களின் அச்சத்தைப் போக் கும் வகையிலோ அல்லது திட்டத் தின் நன்மையை தெரிவிக்கும் வகையிலோ இல்லை. திட்டத்தை புகழ்ந்துதான் உள்ளது. ஒரு மரத்தை வெட்டினால் அதற்குப் பதி லாக 10 மரங்கள் நடப்படும் எனக் கூறுகிறீர்கள். ஆனால் அவ்வாறு நடப்படும் மரங்கள் வளர்வதும் இல்லை. தண்ணீர் ஊற்றி முறையாக பராமரிக்கப்படுவதும் இல்லை’’ என கருத்து தெரி வித்தனர்.
தொந்தரவு தரக்கூடாது
மேலும், இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக் கும் வரை 8 வழிச் சாலைக் காக சம்பந்தப்பட்ட நில உரிமை யாளர்களை அவர்களின் நிலத்தில் இருந்து அப்புறப்படுத்தக் கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 11-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
உயர் நீதிமன்றத்தி்ல் நேற்று நடந்த இந்த வழக்கு விசாரணையை அன்புமணி ராமதாஸ் நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘இந்த திட்டத்துக்காக விவசாயிகளுக்கு எந்த தொந்தர வும் தரக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இது வளர்ச்சித் திட்டம் கிடை யாது. அதனால்தான் நாங்கள் எதிர்க்கிறோம். உள்நோக்கத்துடன் இந்த திட்டத்தை அரசு செயல் படுத்துகிறது. 5 மாவட்ட மக்களும் இதனால் மிகுந்த மன உளைச் சலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு பொதுமக்களிடமும், நீதிமன் றத்திடமும் தவறான தகவலைக் கொடுத்து வருகிறது. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால உத்தரவு மக்களுக்கு ஆதரவாக இருக்கும். இனி இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுக உள்ளோம். 18 கிராம சபைக் கூட்டத்தில் இந்த திட்டத்தை எதிர்த்து போடப்பட்ட தீர்மானத்தை ஆட்சியாளர்கள் தடுக்கின்றனர்’’ என்றார்.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் சி. திருமாறன் கூறும்போது, ‘‘எட்டு வழிச் சாலை திட்டத்துக்கான நில ஆர்ஜிதப் பணிகளுக்கு உயர் நீதிமன்றம் எந்தவித தடையும் பிறப்பிக்கவில்லை. ஆனால், நில உரிமையாளர்களிடம் இருந்து நிலத்தை சுவாதீனம் எடுப்பதற்கு மட்டும் தடை பிறப்பிக்கப்பட்டுள் ளது. தற்போது பிரிவு 3 ஏ(1)ன் கீழ் அறிவிப்பு கொடுக்கப்பட்டு, ஆட்சேபங்கள் பெறப்பட்டு விசாரணையும் முறையாக நடந்து வருகிறது’’ என்றார்.