

சேலம்: வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு கோரி வரும் டிசம்பர் மாதம் போராட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. மாநில இணைப் பொதுச் செயலாளர் அருள் எம்எல்ஏ தலைமை வகித்தார்.
மாநகர் மாவட்டச் செயலாளர் கதிர்.ராசரத்தினம் வரவேற்றார். கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, புதிய செயல் தலைவராக நியமிக்கப்பட்ட ஸ்ரீகாந்தி பரசுராமன், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பூ.த.அருள்மொழி, இளைஞர் சங்க மாநிலத் தலைவர் ஜிகேஎம். தமிழ்க்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீகாந்திக்கு அதிக ஆதரவு: கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: பாமகவுக்கு சேவை செய்யவே எனது மகளை செயல் தலைவராக நியமித்துள்ளேன். ஸ்ரீகாந்திக்கு கட்சியில் அதிக ஆதரவு உள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் 30 முதல் 35 வயதுள்ள இளைஞர்கள் அதிகம். பாமக இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்க்குமரனுக்கு இளைஞர்கள் துணைநிற்க வேண்டும்.
வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக சார்பில் வரும் டிசம்பர் மாதம் போராட்டம் நடத்தப்படவுள்ளது. மேட்டூர் அணையின் உபரி நீரைப் பயன்படுத்த வேண்டுமென எனது தலைமையில் நடந்த போராட்டம் காரணமாக, 100 ஏரிகள் பயன்பெறும் வகையிலான உபரிநீர் திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியது.
இதேபோல, மீதமுள்ள அனைத்து ஏரிகளும் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணையின் உபரிநீர் ஒரு சொட்டுக்கூட வீணாகாத நிலை ஏற்பட வேண்டும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணியை நிச்சயம் உருவாக்குவேன். கூட்டணி குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ முறையாக அறிவிக்கப்படும். திமுகவுடன் கூட்டணியா என்பது போகப்போகத்தான் தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.