

கரூர்: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் இன்று (அக்.27) கட்சித் தலைவர் விஜய் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கரூரில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்தில் தவெகவினர் நேற்று அழைத்துச் சென்றனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கடந்த 3, 4-ம் தேதிகளில் கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர். இதற்கிடையில், உயிரிழந்தோர் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளில் தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் இழப்பீட்டுத் தொகை கடந்த 18-ம் தேதி வரவு வைக்கப்பட்டது.
இதற்கிடையில், கரூருக்கு விஜய் வருவதில் சிக்கல் நீடித்ததால், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து சந்திக்க விஜய் முடிவு செய்தார். இதற்காக, பாதிக்கப்பட்டோரை தவெக நிர்வாகிகள் சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியிலும், நேரிலும் தொடர்பு கொண்டு விவரங்களை கூறி, அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தனர்.
இதையடுத்து, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் 33 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை கரூரில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு நடைபெற்று வந்தது. கரூர் வெண்ணெய்மலையில் இருந்து உயிரிழந்தவர்களின் 30 குடும்பங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோரை 5 ஆம்னி பேருந்துகள் மூலம் சென்னைக்கு தவெகவினர் நேற்று அழைத்துச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் செல்லவில்லை. முன்னதாக, கரூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், அவரவர் குடியிருக்கும் பகுதிகளில் இருந்து பேருந்துகள் நின்ற வெண்ணெய்மலை பகுதிக்கு தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கார்கள், மினி வேன்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். சென்னைக்கு புறப்பட்ட 5 பேருந்துகளுடன், 2 ஆம்புலன்ஸ்கள், ஓய்வுபெற்ற டிஎஸ்பி தலைமையில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தவெக நிர்வாகிகளும் சென்றனர்.