

சாதிக்காகவே கட்சி நடத்தும் அந்தத் தலைவரை ஆண்ட கட்சி தரப்பில் அவ்வளவாய் விரும்பவில்லையாம். அவரைப் போலவே சாதிக் கட்சி நடத்தும் இன்னொரு தலைவருக்கு இருக்கும் செல்வாக்கு இந்தத் தலைவருக்கு இல்லை என்பதே இதன் காரணமாம். சக்சஸ் தலைவர் சொன்னால் அந்த சமூகத்து மக்களில் பெரும்பகுதியினர் ஒருமுகமாக வாக்களிக்கிறார்களாம்.
ஆனால், இந்தத் தலைவர் சொன்னால் அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அத்தனை யூனிட்டியாக வாக்களிப்பதில்லையாம். இதையெல்லாம் கண்டுபிடித்திருக்கும் ஆண்ட கட்சி தரப்பு, “இந்தமுறை அவரை அவர் போக்கிலேயே விட்டுவிடலாம். நாமாகப் போய் அவரை வம்படியாக கூட்டணிக்கு இழுக்க வேண்டாம். அவரை வண்டியில் ஏற்றுவதால் தெற்கில் எங்களுக்கு சாதகமாக விழவேண்டிய குறிப்பிட்ட சமூகங்களின் வாக்குகள் திசை மாறிப் போய்விடுகின்றன” என்று டெல்லி பார்ட்னரை அலெர்ட் செய்து வைத்திருக்கிறதாம்.
இப்படி தாங்கள் ஒதுக்கப்படுவதை புரிந்து கொண்டதால் தான் சாதிக் கட்சி தலைவர், ‘ஸ்டார்’ கட்சிக்கு வக்காலத்து வாங்கிப் பேசி அங்கே ஒரு துண்டைப் போட்டிருக்கிறாராம்.