தம்பிக்குப் பதிலாக அண்ணன்... தென்காசியில் தாமரையை மலரவிடுமா சூரியன்?

மனோகரன், ஆனந்தன் அய்யாசாமி
மனோகரன், ஆனந்தன் அய்யாசாமி
Updated on
1 min read

ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்குப் பின்னால் நின்ற 11 எம்எல்ஏ-க்களில் வாசுதேவநல்லூர் அ.மனோகரனும் ஒருவர். கடந்த 2021 தேர்தலிலும் மனோகரனை வாசுதேவநல்லூரில் நிற்கவைத்தது அதிமுக. ஆனால், மதிமுக வேட்பாளர் சதர்ன் திருமலைக்குமாரிடம் தோற்றுப் போனார். இப்போது வரை தன்னை ஓபிஎஸ் ஆதரவாளராகவே காட்டிக்கொள்ளும் மனோகரன் போட்டியிட்ட தொகுதியில் இந்த முறை அவரது அண்ணன் ஆனந்தன் அய்யாசாமி தாமரை சின்னத்தில் போட்டியிட தடபுடலாக தயாராகி வருகிறார்.

இன்டெல் நிறுவனத்தின் பொறியியல் இயக்குநராக பணியாற்றிய ஆனந்தன் அய்யாசாமி, அண்ணாமலைக்கு அணுக்கத் தோழர். தற்போது தென்காசி மாவட்ட பாஜக தலைவராக இருக்கும் இவருக்குத்தான் கடந்த மக்களவைத் தேர்தலில் தென்காசி சீட் என பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், கூட்டணித் தோழரான ஜான் பாண்டியனுக்கு தென்காசியை விட்டுத்தர வேண்டிய சூழல் வந்ததால் ஆனந்தனின் தென்காசி கனவு கைகூடவில்லை.

இந்த நிலையில், அண்மைக்காலமாக வாசுதேவநல்லூர் தொகுதியை மையப்படுத்தி மருத்துவ முகாம்கள், நல உதவிகள் வழங்குதல் என பரபரப்பாக இயங்கி வருகிறார் ஆனந்தன் அய்யாசாமி. தனது தம்பி மனோகரன் வெற்றிபெற்ற வாசுதேவநல்லூர் தொகுதியில் இம்முறை ஆனந்தன் தானே போட்டியிட முடிவெடுத்தே தொகுதியைச் சுற்றி வருவதாக பாஜக தரப்பில் சொல்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக இபிஎஸ் தனது பிரச்சாரப் பயணத்தின் போது வாசுதேவ நல்லூர் தொகுதியில் ஆனந்தன் அய்யாசாமிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார்.

அதிமுக கூட்டணியில் அண்ணன் ஆனந்தன் அய்யாசாமி வாசுதேவநல்லூருக்காக இப்படி தயாராகி வரும் நிலையில், ஓபிஎஸ் அணிக்காக நீங்கள் இங்கே களமிறங்க வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டால், “இப்போதைக்கு நான் விவசாயத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். அரசியல் பற்றி எல்லாம் அப்புறம் பார்க்கலாம்” என்று நழுவுகிறார் தம்பி மனோகரன்.

தென்காசி மாவட்டத்தில் இதுவரை பாஜக வென்றதே இல்லை. பண பலம், படைபலம் படைத்த ஆனந்தன் அய்யாசாமி களமிறங்கினால் வாசுதேவநல்லூரில் இம்முறை தாமரை மலர நிறையவே சான்ஸ் இருக்கிறது என்கிறார்கள் பாஜககாரர்கள். அவர்களுக்கு செக் வைக்கும் விதமாக இம்முறை தொகுதியை மதிமுகவுக்கு தராமல் தாங்களே போட்டியிட்டு பார்க்கலாமா என்ற திட்டத்தில் திமுகவும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in