

விருதுநகர் மாவட்டத்தில், அதிமுக கூட்டணி அமைந்தால் அருப்புக்கோட்டை தொகுதியிலும், திமுக கூட்டணி அமைந்தால் விருதுநகரிலும் போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறது தேமுதிக.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சொந்த மாவட்டம் விருதுநகர் என்பதால் இம்முறையும் மகன் விஜய பிரபாகரனை இந்த மாவட்டத்தில் ஒரு தொகுதியில் நிறுத்தும் ஆலோசனையில் இருக்கிறார் பிரேமலதா. கடந்த மக்களவைத் தேர்தலில் சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விருதுநகரில் விஜய பிரபாகரனின் வெற்றி கைநழுவிப் போனது. அதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் விட்ட இடத்தைப் பிடிக்கும் திட்டத்துடன் இருக்கிறது தேமுதிக.
விஜயகாந்தின் சொந்த ஊரானராமானுஜபுரம் அருப்புக்கோட்டைதொகுதிக்குள் வருவதால் அருப்புக்கோட்டை தொகுதியை மகனுக்கான முதல் சாய்ஸாக வைத்திருக்கிறார் பிரேமலதா. ஆனால், அதிமுக கூட்டணி என்றால் மட்டுமே அருப்புக்கோட்டை இவர்களுக்கு சாத்தியமாகும். ஒருவேளை, திமுக கூட்டணியில் சேரவேண்டிய சூழல் வந்தால் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் தொகுதியான அருப்புக்கோட்டையைக் தங்களுக்குக் கேட்கமுடியாது என்பதால் விருதுநகர் தொகுதியை பிரேமலதா பி பிளானாக வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் தேமுதிக வட்டாரத்தில்.
இதனிடையே, சென்னை அரசியலில் இருந்து விருதுநகர் அரசியலுக்கு மீண்டும் திரும்பி இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விருதுநகர் தொகுதிக்காக மெனக்கிட்டு வருகிறார். அவருக்கு விருதுநகர் கிடைத்துவிடக் கூடாது என்பதில் விடாப்பிடியாக இருக்கும் இன்னொரு முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, சந்தடிச் சாக்கில் விருதுநகர் தொகுதியைக் கூட்டணிக் கட்சிகளுக்கு தள்ளிவிடும் தந்திரத்துடன் இருப்பதும் தேமுதிகவுக்கு சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது.