சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக முதல்வரின் தயக்கமும், கூட்டணிக் கட்சிகளின் மவுனமும் - அன்புமணி சாடல்

சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக முதல்வரின் தயக்கமும், கூட்டணிக் கட்சிகளின் மவுனமும் - அன்புமணி சாடல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலின் தயங்கி கொண்டிருப்பது ஏன்? இது குறித்து முதல்வர் நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது கூறியதாவது: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலின் தயங்கிக் கொண்டிருக்கிறார். இது குறித்து நிச்சயமாக அவர் பதிலளிக்க வேண்டும். முதல்வர் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுக்கப்பு நடத்தாமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம்.

கர்நாடகா, பிஹார் உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம் என கூறிய பிறகும் முதல்வர் தயங்குவது ஏன்? சமூக நீதி எங்கள் பிறப்புரிமை, உயிர் மூச்சு என வசனம் பேசிக் கொண்டிருக்கும் முதல்வர் ஏன் இப்படி செய்கிறார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் இது குறித்து கேள்வி எழுப்பாதாது ஏன்?

பெரியார் வழியில் வந்த வைகோ இது குறித்து கேள்வி எழுப்பாமல், அழுத்தம் கொடுக்காமல் இருப்பது ஏன்? முதல்வரிடம் அழுத்தம் கொடுத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென திருமாவளவன் ஏன் அழுத்தம் தரவில்லை? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், சமூக நீதியை நிலைநாட்டலாம். பின்னர் வறுமை ஒழியும், சாதி பிரச்சினையே ஒழியும். கேட்டால் திராவிட மாடல் என்றார் சொல்வார்கள்.

அப்படி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அதிகளவில் பட்டியலின மக்கள் தான் பயனடைவார்கள். திருமாவளவன் ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறார் கூட்டணிக்காவா? சீட்டுக்காகவா? தேர்தலுக்காகவா? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இது குறித்து ஒரு மூச்சு கூட விடவில்லை. திமுக தமிழகத்துக்கு செய்த முதலீடு பொய்தான். கூட்டணி கட்சிகள் ஏன் மவுனம் காக்கிறார்கள்.

தென் மாவட்டங்களில் கனிமவளங்கள் அதிகளில் கேரளாவுக்கு கடத்திச் செல்லப்படுகிறது. இதில் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. இது குறித்து அறிக்கைகள் வெளியிட்டோம் ஆனால் அரசு இதை கண்டுகொள்ளவில்லை. தென் மாவட்டத்தில் உள்ள முக்கிய திமுக புள்ளி ஒருவர் தான் இந்த விவகாரங்களுக்கு எல்லாம் ‘காட் ஃபாதர்’. தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கனிமவளங்களை கேரளாவுக்கு கடத்தி செல்கிறார்கள். இது அனைவருக்கும் தெரியும். இந்த விவகாரத்தை விசாரிக்க சிபிஐ விசாரணை வேண்டும்.

வேளாண்துறை அமைச்சர் விவசாயிகள் குறித்து கவலைப் படவில்லை. விவசாயிகள் இதற்கு தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in