

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நேற்று பார்வையிட்டு, பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை தீவிரம் அடைந்துள்ளது.
நெல் கொள்முதலை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், ஒரத்தநாடு புதூர், பின்னையூர், கண்ணத்தங்குடி உள்ளிட்ட கிராமங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன.
இதேபோல, டெல்டாவில் பல மாவட்டங்களில் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. ஆனால், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் தஞ்சாவூரில் ரயில் வேகன்களில் நெல் மூட்டைகள் ஏற்றப்படுவதை மட்டும் பார்த்துவிட்டு, நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் இல்லை என தவறான தகவலை கூறி, விவசாயிகளை கொச்சைப்படுத்துகிறார்கள்.
உண்மைக்கு புறம்பான தகவல்களைக் கூறுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் திருப்பதி வாண்டையார், மாவட்டத் தலைவர் ஊரணிபுரம் ரவிச்சந்திரன்உள்ளிட்டோர் உடனிருந்தனர்.