அடையாறு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணி: விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை சீனிவாசபுரம் அருகில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நா.எழிலன் எம்எல்ஏ, மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர்.
சென்னை சீனிவாசபுரம் அருகில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நா.எழிலன் எம்எல்ஏ, மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

சென்னை: அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை எழிலகத்தில் அக்.19-ம் தேதி, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து, திருவாரூர், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து, தலைமைச்செயலகத்தில் அக்.21-ம் தேதி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் களுடன் காணொலியில் ஆய்வு செய்தார்.

இந்நிலையில், சென்னை சீனிவாசபுரம் அருகில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்து முகத்து வாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

சென்னை நகரின் 3 முக்கிய ஆற்றுப்படுகைகளில் ஒன்றான அடையாறு ஆறு, ஆதனூர் ஏரியில் இருந்து உருவாகி மொத்தம் 42.38 கி.மீ பயணித்து பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தற்போது, பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் 945 கனஅடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 150 மீட்டர் அளவுக்கு அடையாறு முகத்துவாரத்தை அகலப்படுத்த முதல்வர் ஏற்கெனவே உத்தரவிட்டார். முதல்வர் நேற்று பார்வையிட்டபோது, கரைப்பகுதியில் தூர்வாரி அள்ளப்பட்ட மணல் குவியலை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டார்.

இதுதவிர, அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியினைமாநகராட்சி வட்டார துணை ஆணையர் தலைமையில் நீர்வளத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் கொண்ட குழுவினை அமைத்து வடகிழக்குப் பருவமழை முடியும் வரை கண்காணிப்பு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏ நா.எழிலன், தெற்கு வட்டார துணை ஆணையர் அஃதாப் ரசூல், நீர்வளத் துறை செயற்பொறியாளர் அருண்மொழி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in