

சென்னை: மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவியை ஸ்கேலால் அடித்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். புழுதிவாக்கத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இந்திராகாந்தி. இவர் அக்.9-ம் தேதி, 5-ம் வகுப்பு மாணவி ஒருவரை ஸ்கேலால் அடித்ததில் மாணவியின் உடலில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. இதுதொடர்பாக மாநகராட்சிக்கு புகார் வந்த நிலையில், தலைமை ஆசிரியை இந்திராகாந்தியிடம் விளக்கம் கோரப்பட்டது.
அவர் அளித்த விளக்கத்தில், “மாணவியின் நலன்கருதி அடித்ததால் வீக்கம் ஏற்பட்டது. அடுத்தநாள் வீக்கம் இல்லை. இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறை செய்ய மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொதுநலன் கருதியும், குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கொண்டும், தலைமை ஆசிரியையை தற்காலிக பணி நீக்கம் செய்து, மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், ஆணையரின் முன் அனுமதியின்றி தலைமை ஆசிரியை சென்னையைவிட்டு வெளியே செல்லக்கூடாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.