

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் குறைந்த மின் அழுத்தம், அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டால் அவதியுற்று வரும் பொதுமக்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து, ராமேசுவரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 10 கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ராமேசுவரம் தீவுப் பகுதி முழுவதும் சமீப காலமாக அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு மற்றும் குறைந்த மின் அழுத்தம் பிரச்சனையால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான தெருப் பகுதிகளில் மாலை முதல் அதிகாலை வரை தொடர் குறைந்த மின் அழுத்த பிரச்சனை பல மாதங்களாக இருந்து வருகிறது.
சீரான மின் அழுத்தம் இல்லாததால் மாலை நேரத்துக்குப் பிறகு வீடுகளில் தண்ணீர் மோட்டர், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட மின் சாதனங்களை எவ்வித அத்தியாசிய தேவைகளுக்கும் சரியான நேரத்தில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ராமேசுவரத்தில் தங்கும் விடுதிகள், உணவகங்கள், பேக்கரி, சலூன் கடைகள் உள்ள நகர்புற பகுதியில் அடிக்கடி சீரான மின் அழுத்தம் இல்லாததால் தொழிக்கு பயன்படுத்தப்படும் அனைத்து விதமான மின் சாதன பொருட்களும் குறுகிய காலத்தில் பழுதாகி விடுவதாக வணிக பயன்பாட்டாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், தீவு முழுவதும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு பிரச்சனையால் பொதுமக்கள் மட்டுமின்றி ராமேசுவரம் வரும் பக்தர்கள் சுற்றுலாப் பயணிகளும் பாதிப்படைகின்றனர். மழைக் காலம் துவங்கவுள்ள நிலையில் ராமேசுவரம் தீவு பகுதியில் இதேபோல் மின்சார பிரச்சனை தொடர்ந்தால் மக்கள் கொசுக்கடியால் பெரும் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை உருவாகும். எனவே, மாவட்ட நிர்வாகம் ராமேசுவரம் தீவு பகுதியில் சீரான மின்சாரம் விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.