

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். பண்டிகை முடிந்து அவர் மீண்டும் சென்னை திரும்ப நேற்று முன்தினம் முதல் தமிழக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு தினமும் 2,092 பேருந்துகள் இயக்கப்படும். அதனுடன் கூடுதலாக நேற்று முன்தினம் 2,048 பேருந்துகளும், நேற்று 2,392 பேருந்துகளும் இயக்கப்பட்டன.
பல்வேறு ஊர்களில் இருந்து கோவை, திருச்சி, மதுரை போன்ற பிற முக்கிய நகரங்களுக்கு நேற்று முன்தினம் 2,245 பேருந்துகளும், நேற்று 1,485 பேருந்துகளும் இயக்கப்பட்டன.
பெரும்பாலான மக்கள் கடந்த 2 நாட்களிலேயே சென்னை திரும்பி இருப்பார்கள் என்பதால் இன்று கூடுதலாக 813 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 813 பேருந்துகள் என மொத்தம் 2,905 பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. பிற முக்கிய நகரங்களுக்கு இன்று 870 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.