

சென்னை: தமிழக திமுக அரசு தனது வறட்டுப் பிடிவாதத்தை கை விட்டு அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் கவனம் செலுத்த பிரதமரின் ‘பிஎம் ஸ்ரீ’ திட்டத்தை ஏற்குமாறு தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை: ‘பிஎம் ஸ்ரீ’ திட்டத்தை ஏற்க கேரள கம்யூனிஸ்ட் அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
மத்திய அரசின் இந்த திட்டம் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் அனைத்து வசதி, வாய்ப்புகளும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்யும் என்ற உண்மையை உணர்ந்து இந்த திட்டத்தில் இணைய கேரள அரசு முடிவெடுத்துள்ளது.
பல ஆண்டுகளாக கடை பிடித்த வறட்டுப் பிடிவாதத்தை கைவிட்டு மத்திய அரசுடன் ஒத்துழைக்க சம்மதித்துள்ளது.அதே வறட்டுப் பிடிவாதத்தை தமிழக திராவிட மாடல் திமுக அரசும் கைவிட்டு, மத்திய அரசோடு இணைந்து ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், திமுக அரசு தமிழர் விரோத, மாணவர் விரோத அரசு என்ற முத்திரை வலுப்பெறும்.