Published : 02 Aug 2018 10:58 AM
Last Updated : 02 Aug 2018 10:58 AM

திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ, ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணம்

திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ,  ஏ.கே.போஸ் வசித்து வந்தார். இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவரது குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஏ.கே.போஸ் உயிரிழந்தார்.

ஏ.கே.போஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஜீவா நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மதுரை வடக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலுக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இதனால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாலை 5 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

முதுகலைப் பட்டம் பெற்ற ஏ.கே.போஸ் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அதிமுகவில் இருந்தவர். 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் நின்று போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அதன்பிறகு, 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானார். 2011 சட்டப்பேரவை தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 இல் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு போஸ் வெற்றி பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x