கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை

படம்:ஜெ.மனோகரன்
படம்:ஜெ.மனோகரன்
Updated on
1 min read

கோவை அவிநாசி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்ட மேம்பாலம், கடந்த 9-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும், மேம்பாலத்தின் இறங்குதளத்தில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டுமென போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுதொடர்பான எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன. இதையும் மீறி வாகன ஓட்டிகள் வேகமாக சென்று வருகின்றனர். கடந்த வாரம் மேம்பாலத்தில் இருந்து அதிவேகமாக வந்த கார், கீழே இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியதில், 3 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மேம்பாலத்தில் 40 இடங்களில் நவீன கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சமூக செயல்பாட்டாளரான கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் தலைவர் சி.எம்.ஜெயராமன் கூறும்போது, ‘‘ஜி.டி.நாயுடு மேம்பாலத்தின் உப்பிலிபாளையம் - கோல்டுவின்ஸ் ஆகிய இருபுற இடங்களிலும் போலீஸார் பேட்ரல் வாகனத்தை நிறுத்தி கண்காணிக்க வேண்டும். இறங்குதளங்கள், ஏறுதளங்கள் குறித்த அறிவிப்புப் பலகைகளை 100 மீட்டருக்கு முன்னரே வாகன ஓட்டிகளுக்கு தெரியுமாறு வைக்க வேண்டும். சட்டத்துக்கு உட்பட்டு அங்கு எந்த வகையான வேகத் தடைகளை அமைக்க முடியுமோ, அவற்றை குறிப்பிட்ட துரத்துக்கு அமைக்க வேண்டும். அதேபோல், விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க மேம்பாலத்தின் இருபுறங்களிலும் ஆம்புலன்ஸ் வாகனத்தை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்’’ என்றார்.

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் கூறும்போது, ‘‘அவிநாசி சாலை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இறங்குதளங்களில் ரப்பர் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, உப்பிலிபாளையம் ரவுண்டானா அருகே சிக்னல்கள் அமைக்கப் பட்டுள்ளன. மேம்பாலத்தின் மீது பல்வேறு இடங்களில் ‘ஏஐ’ தொழில்நுட்ப வசதியுடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் அதிவேக வாகன ஓட்டிகள், விதிமீறல் வாகன ஓட்டிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேம் பாலத்தில் வாகனங்கள் இறங்கும், ஏறும் இடங்களில் அறிவிப்புப் பலகைகளை, குறிப்பிட்ட தூரத்துக்கு முன்னரே பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in