Published : 18 Oct 2025 08:10 PM
Last Updated : 18 Oct 2025 08:10 PM
கரூர்: கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கிக் கணக்குகளில் தவெக சார்பில் சனிக்கிழமை தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. கடந்த 5-ம் தேதி கரூர் வந்த இக்குழுவினர், பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். மேலும், இவ்வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த தவெக நிர்வாகிகள் 2 பேரை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இதனிடையே, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி கடந்த 13-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரி பிரவீண்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த 16-ம் தேதி இரவு கரூர் வந்தனர். அவர்கள் கரூர் பொதுப்பணித் துறை சுற்றுலா மாளிகையில் தங்கி, விசாரணையை தொடங்கினர்.
இதனிடையே, இந்தச் சம்பவத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும், காங்கிரஸ் சார்பில் தலா ரூ.2.50 லட்சம், மநீம சார்பில் தலா ரூ.1 லட்சம், விசிக சார்பில் ரூ.50 ஆயிரம் என பல்வேறு கட்சிகள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
இதேபோல, தவெக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவியை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக, கரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வரவழைத்து, அங்கு அவர்களுக்கு விஜய் நிவாரண உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக விஜய் வருகை தள்ளிப்போவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் உயிரிழந்த நிலையில், 27 பேரின் வங்கிக் கணக்குகளிலும் சனிக்கிழமை தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது. அதற்கான குறுஞ்செய்தி அவர்களது செல்போனுக்கு வந்தது. இதேபோல, இங்கு உயிரிழந்த மேலும் 10 பேரின் குடும்பத்தினருக்கும் தவெக சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்தாலும், அந்தக் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கரூரில் தனது 2 மகள்களை பறிக்கொடுத்த வேலுசாமிபுரம் செல்வராணி கூறும்போது, “தவெகவினர் வங்கிக் கணக்கு விவரங்களை வாங்கியிருந்த நிலையில் இன்று வங்கிக் கணக்கில் ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டதற்கான எஸ்எம்எஸ் வந்தது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT