நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் என கூறுவதா? - உதயநிதிக்கு பாஜக கண்டனம்

நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் என கூறுவதா? - உதயநிதிக்கு பாஜக கண்டனம்
Updated on
1 min read

சென்னை: “நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் என கூறும் உதயநிதி ஸ்டாலின், மற்ற மத பண்டிகைகளுக்கு இப்படி வாழ்த்து கூறுவாறா?” என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து மக்களையும் சமமாகவே நடத்த வேண்டும். ஆனால், திமுக அரசு இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறக்கூட மனமில்லாமல், இந்து மதத்தின் மீது மட்டும் வெறுப்பை கக்கி வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்ற மத பண்டிகைகள் அனைத்துக்கும் தவறாமல் வாழ்த்து கூறுகிறார். அந்நிய நாடுகளில் இருந்து வந்த மதங்களின் பண்டிகைகளுக்கும் வாழ்த்து கூறுகிறார்.

ஆனால், 6 கோடிக்கு அதிகமான இந்துக்கள் வாழும் தமிழகத்தில் இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூற முதல்வர் மு.க.ஸ்டாலின் விடாப்பிடியாக மறுத்து வருகிறார். இது கடும் கண்டனத்துக்குரியது. இந்தச் சூழலில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்” என்று கூறியதாக செய்திகள் வந்துள்ளன.

மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு இப்படி வாழ்த்து கூற துணிச்சல் இல்லாதவர், “தீபாவளி பண்டிகைக்கு மட்டும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு வாழ்த்துகள்” என்று கூறுவது தமிழகத்தில் உள்ள இந்துக்களை மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் 100 கோடிக்கும் அதிகமான இந்துக்களை அவமதிக்கும் செயல்.

இந்து மத பண்டிகைக்கு வாழ்த்து கூறுவதில் கூட கண்ணியத்தை கடைப்பிடிக்காத இந்து விரோத திமுக அரசுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in