Published : 17 Oct 2025 10:18 AM
Last Updated : 17 Oct 2025 10:18 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ரேஷன் கடை கேட்டு மனு கொடுத்தவருக்கு, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதச் சொல்லி பதில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். சிவகங்கை அருகே அரசனூர் ஊராட்சி திருமாஞ் சோலையில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கான ரேஷன் கடை 3 கி.மீ. தூரத்தில் உள்ள செம்பூரில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு ரேஷன் கடை கேட்டு நீண்ட காலமாகப் போராடுகின்றனர்.
இந்நிலையில், ஜூலை 31-ம் தேதி அரசனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடந்தது. இதில் திரு மாஞ்சோலையைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் பகுதிநேர ரேஷன் கடையை தங்கள் பகுதியில் அமைக்கக் கோரி மனு கொடுத்தார். முகாமில் கொடுக்கப்படும மனுக்களுக்கு 45 நாட்களில் பதில் தரப்படும் என அரசு தெரிவித்திருந்த நிலையில், 70 நாட்கள் கழித்து அவருக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதில் கடிதம் வந்துள்ளது.
அதில், நீங்கள் எம்.ஏ. பட்டதாரி என்பதால் டிஎன்பிஎஸ்சி, சீருடை பணியாளர் தேர்வாணை யம், ஆசிரியர் தேர்வு வாரியம், எஸ்எஸ்சி மூலம் தேர்வு எழுதி பணிக்குச் செல்லலாம். அதற்கு இலவசப் பயிற்சி அளிக்கிறோம். வேலைவாய்ப்பற்ற இளைஞர் களுக்கான உதவித் தொகை பெறவும் நீங்கள் விண்ணப்பிக்கலாம் என்பன உள்ளிட்ட வேலைவாய்ப்புத்துறை தொடர்பான தகவல்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. ரேஷன் கடை கேட்டு மனு கொடுத்ததற்கு டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளை எழுதச் சொல்லி பதில் வந்ததால் மாரிமுத்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மாரிமுத்து கூறியதாவது: நான் ரேஷன் கடை கேட்டு மனு கொடுத்தேன். ஒரு மாதத்துக்கு முன்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து செல்போன் மூலம் என்னைத் தொடர்பு கொண்ட அதிகாரி ஒருவர், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மனு கொடுத்தது தொடர்பாக பேசுவதாக கூறினார். தொடர்ந்து எனது படிப்பு உள்ளிட்ட விவரங்களை கேட்டார். அப்போதே நான் ரேஷன் கடை கேட்டுத்தான் மனு கொடுத்தேன்.
வேலைவாய்ப்பு கேட்கவில்லை என்று கூறினேன். மனு கொடுத்த 70 நாட்களுக்கு பின்னர் அக். 9-ம் தேதி வேலைவாய்ப்பு தொடர்பான பதிலை அனுப்பியுள்ளனர். இவ்வாறு அலட்சியமான பதில் அளித்தது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT