

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் சென்னையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சிபிஎஸ் (புதிய ஒய்வூதியம்) ஒழிப்பு இயக்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை எழிலகம் அருகே மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது.
மாநில இணை ஒருங்கிணைப்பாளர் கே.முனியாண்டி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து திருவல்லிக்கேணியில் உள்ள சமூகநலக் கூடத்தில் வைத்திருந்து மாலையில் விடுவித்தனர்.
இது தொடர்பாக போராட்டக் குழுவினர் கூறியதாவது: திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தது. ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மூவர் குழு கடந்த பிப்ரவரியில் அமைக்கப்பட்டது. இந்தக் குழு கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது. அதற்குள் தேர்தல் வந்துவிடும்.
எனவே இந்த மூவர் குழுவை கலைத்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். சென்னை மண்டலம் தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிர்வாகிகள் இன்று (அக்.16) மறியலில் ஈடுபட உள்ளனர். அதன் பின் டிசம்பர், ஜனவரியில் வேலைநிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.