Published : 15 Oct 2025 04:04 PM
Last Updated : 15 Oct 2025 04:04 PM
அரியலூர்: “தலைமறைவாக இருந்த தவெகவினர், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் இப்போது வெளியே வருவது மட்டுமல்ல, நீதி வெல்லும் என்று சொல்கிறார்கள். முதலில் சிரிப்பது முக்கியமல்ல, இறுதியில் யார் சிரிக்கிறார்கள், யார் உணர்கிறார்கள் என்பதுதான் முக்கியம்” என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள, பெரியார் உலகத்திற்கு நிதி பங்களிப்பு தரும் நிகழ்ச்சி அரியலூர் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, திக நிர்வாகிகள் மற்றும் குடும்பங்களிடமிருந்து பெரியார் உலக கட்டமைப்புக்கான நிதிப்பகிர்வாக முதற்கட்ட தொகையாக ரூ.10-லட்சம் பெற்றுக் கொண்டார்.
பின்னர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘சிபிஐ விசாரணை என்றதும், தலைமறைவாக இருந்த தவெக பொதுச்செயலாளர் வெளியேவந்துள்ளது’ குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “உச்சநீதிமன்றம் கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது எந்த வகையில் சரியானது என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதை ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் சொல்கிறேன், பத்திரிகைகள் கூட இதை தவறான உத்தரவு என்று விமர்சிக்கிறார்கள்.
தலைமறைவாக இருந்த தவெகவினர், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் இப்போது வெளியே வருவது மட்டுமல்ல. நீதி வெல்லும் என்று சொல்கிறார்கள். முதலில் சிரிப்பது முக்கியமல்ல, இறுதியில் யார் சிரிக்கிறார்கள், யார் உணர்கிறார்கள் என்பதுதான் முக்கியம். முதல் பிரச்சினையே அவசர அவசரமாக வீட்டுக்கு சென்று அந்த நடிகர் தன்னை பாதுகாத்துக் கொண்டார். இப்போது காவல்துறை சொன்னார்கள் என்று சொல்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களை விசாரிப்பதில் என்ன இருக்கிறது.
வேகமாக வந்தது முதல்வர் மட்டுமே. அடுத்த 12 மணி நேரத்தில் அவர் செய்த பணி மிக அதிகம். இதில் எதுவும் செய்ய முடியவில்லையே என்றதும், இதை அரசியல் மூலதனமாக்க வேண்டும் என்பவர்கள் இதை பயன்படுத்த வந்திருக்கிறார்கள். பொதுவாழ்வில் வந்த கருணாநிதி, அண்ணா, பெரியார், திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் ஓடி ஒளிந்தது கிடையாது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற சங்கடங்கள் நிகழலாம். ஆனால் அதை எதிர்கொள்ள கூடிய துணி தேவை. மேலும், தன் கீழ் உள்ளவர்களுக்கு நல் அறிவுரையும் சொல்லி கட்டுப்பாடு மிக்க ஒரு அமைப்பாக உருவாக்க வேண்டியதற்கு பதில், கட்டுப்பாடு இழந்ததை நியாயப்படுத்த முனைவது அவர்களது கட்சிக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பொதுவாழ்க்கை மற்றும் பொது ஒழுக்கத்திற்கு விரோதமானது.” என்றார்.
பெரியாரின் படங்களை, தவெக கூட்டத்தில் பயன்படுத்துவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், “எங்களைப் போன்றவர்கள் பெரியாரை பரப்புவதைவிட, அவரை பாதுகாப்பது என்பது மிக முக்கியம். அந்தப் பணியை தான் தற்போது செய்து வருகிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT