Last Updated : 15 Oct, 2025 02:18 PM

2  

Published : 15 Oct 2025 02:18 PM
Last Updated : 15 Oct 2025 02:18 PM

கரூர் விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? - வெளிநடப்புக்குப் பின் இபிஎஸ் கேள்வி

கோப்புப் படம்

சென்னை: “கரூர் விவகாரம் பற்றி பேசினால், ஆளுங்கட்சிக்கு ஏன் இவ்வளவு பதற்றம். இந்த விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு பாதுகாப்புக் குறைபாடே காரணம்.” என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விவாதம் நடந்தது. கரூர் கூட்டநெரிசல் குறித்த சட்டப்பேரவையில் நடந்துகொண்டிருந்த விவாதத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை குறிப்பிட்டு இபிஎஸ் மீது அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் குற்றச்சாட்டு வைத்தார். இதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையின் முன் அமர்ந்து எடப்பாடி பழனிசாமி தர்ணாவில் ஈடுபட்டார்.

தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள், அரசுக்கு எதிராக முழுக்கமிட்டபடி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். செங்கோட்டையன் இபிஎஸ் பேசுவதற்கு முன்பே சென்றுவிட்டார். இருப்பினும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்யவில்லை.

பின்னர், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்தது. பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “முதல்வர் பேசியதை நாங்கள் அமைதியாக கேட்டோம். ஆனால் சாபாநாயகர் நாங்கள் பேச உரிய அனுமதி கொடுக்கவில்லை. எதிர்க்கட்சியினர் பேசிய பிறகு, முதல்வர் பதில் அளிப்பது தான் மரபு.

தவெக தலைவர் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பத்து நிமிடம் தான் பேசியிருப்பார், அப்போது ஒரு செருப்பு வந்து அங்கு விழுகிறது. இது குறித்து அரசு ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. கரூரில் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக ஏடிஜிபி கூறினார். 660 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக முதல்வர் கூறுகிறார். இதிலேயே முரண்பாடு; இதனால்தான் கரூர் சம்பவத்தில் அரசின்மீது சந்தேகம் எழுகிறது. கரூர் சம்பவத்துக்கு அரசின் அலட்சியமே காரணம். எவ்வளவு பேர் கூடுவார்கள் என உளவுத்துறைக்கு தெரிந்திருக்கும். ஆனாலும் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை.

சட்டப்பேரவையில், பேச முடியாததை இப்போது செய்தியாளர்களிடம் பேசுகிறேன். ஜனவரியில் அதிமுக கூட்டம் நடத்த கரூர் வேலுச்சாமிபுரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றத்துக்கு சென்ற பிறகே எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எங்களுக்கு நிராகரித்த இடத்தை தவெகவுக்கு எதற்காக அரசு கொடுத்தது?; கரூர் சம்பவத்தில் அசம்பாவிதம் நடக்க வேண்டும் என திட்டமிட்டு அவ்விடத்தை கொடுத்ததாக மக்களும் சந்தேகிக்கின்றனர். ஏதோ உள்நோக்கத்தோடு தான் இந்த இடம் கொடுக்கப்பட்டது. போலீஸாரின் கவனக்குறைவே கூட்ட நெரிசலுக்கு காரணம். எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திருந்தால், இப்படி நடந்திருக்காது.

கரூர் சம்பவத்தில் வேகம் காட்டும் முதல்வர், கிட்னி திருட்டு விவகாரத்தில் ஏன் வேகம் காட்டவில்லை. கரூர் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. மக்களுக்காகவே பேசுகிறோம். கரூர் விவகாரம் பற்றி பேசினால், ஆளுங்கட்சிக்கு ஏன் இவ்வளவு பதற்றம்?. இந்த விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது. அதனால் தான் நான் பேசும்போது, ஒவ்வொரு அமைச்சரும் எழுந்து பதில் சொல்கிறார்கள். கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை நினைத்து ஆளும்கட்சி பயப்படுகிறது. எல்லா விஷயத்திலும் அரசியல் செய்யும் கட்சி திமுகதான்.

ஒரு அரசியல் கூட்டத்தில் 41 பேர் இறந்தது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. அவசர அவசரமாக ஒரு நபர் ஆணையத்தை எப்படி அமைக்க முடியும். உடற்கூராய்வு செய்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உண்மை சம்பவத்தை மறைக்க அரசு நினைக்கிறது. ஒரு நபர் ஆணையம் என்பது உண்மையை மறைக்கும் முயற்சி” இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x