

சென்னை: அதிமுகவின் 54-வது தொடக்க நாளையொட்டி வரும் 17-ம் தேதி பொதுச் செயலாளர் பழனிசாமி கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்குகிறார். இது தொடர்பாக கட்சித் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக அக். 17-ம் தேதி 54-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதைக் கொண்டாடும் வகையில் அன்று காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சிகளில், அதிமுக தலைமை நிலையச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி. எம்எல்ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி. எம்எல்ஏ-க்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதேபோல, தமிழகம் முழுவதும் கட்சிக் கொடிக் கம்பங்களுக்கு வண்ணம் பூசியும், புதிய கொடிக் கம்பங்களை அமைத்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்தும், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், தொண்டர்களுக்கு இனிப்பும், ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கியும் விழாவைச் சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.