காஞ்சிபுரத்தில் மர்மக் காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுமா?

காய்ச்சலில் உயிரிழந்த சிறுமி கார்த்திகா.
காய்ச்சலில் உயிரிழந்த சிறுமி கார்த்திகா.
Updated on
1 min read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மர்மக் காய்ச்சல் காரணமாக சிறுமி ஒருவர் உயிரிழந்தார். காய்ச்சலுக்கான காரணத்தை கண்டறிந்து, அந்தப் பகுதியில் நோய் பரவாமல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரங்கசாமி குளம் அருகே, ஏ.கே.டி. தெருவில் வசித்து வருபவர் சக்திவேல் - சரண்யா தம்பதியினர். சக்திவேல் - சரண்யா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டாவது பெண் குழந்தையான கார்த்திகா, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கார்த்திகாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டவுடன், தந்தை சக்திவேல் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பின்னர், காய்ச்சல் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென கார்த்திகாவிற்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிக காய்ச்சல் காரணமாக, கார்த்திகா மயக்க நிலைக்கும் சென்றுள்ளார். இதனால் பதறிய பெற்றோர் உடனடியாகக் காஞ்சிபுரம், காரப்பேட்டை பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு கார்த்திகாவிற்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்குக் கார்த்திகாவை சிகிச்சைக்காகக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சில மணி நேரம் சிகிச்சை பெற்ற கார்த்திகா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மர்மக் காய்ச்சல் காரணமாக காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி உயிரிழந்திருக்கும் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுமா?: தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மர்ம காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத் துறை இது பரவக்கூடிய காய்ச்சலா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும், காய்ச்சல் பரவாமல் தடுக்க தகுந்த நடவடிக்கை வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் சுகாதாரத் துறை இணை இயக்குநர் செந்திலிடம் கேட்டபோது, “காய்ச்சல் எதனால் வேண்டுமானாலும் வரலாம். உயிரிழந்த குழந்தை வசித்த பகுதியில் டெங்கு அல்லது தொற்றக்கூடிய எந்தவித பாதிப்பும் இல்லை. அந்தப் பகுதி முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பரிசோதனையும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. குழந்தை இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.” என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in