‘சீமை’ தொகுதியை குறிவைத்து கறிவிருந்து | உள்குத்து உளவாளி

‘சீமை’ தொகுதியை குறிவைத்து கறிவிருந்து | உள்குத்து உளவாளி

Published on

தமிழகத்தைச் சேர்ந்த தேசியக் கட்சி விஐபியான அவர் அண்மையில் தனது எண்பதாவது பிறந்த நாளை சுமார் 30 விஐபிக்களை மட்டும் தனது தோட்டத்து வீட்டுக்கு அழைத்து அடக்கமாக கொண்டாடினார். அவர் அடக்கிவாசித்தாலும் அவர் மூலமாக கூட்டணியில் தங்களுக்கான ‘தொகுதியை’ பிடிக்க நினைக்கும் இரண்டு பேர் வேற லெவலுக்கு அசத்திவிட்டார்களாம்.

‘சீமை’ தொகுதியை குறிவைக்கும் அந்தக் கட்சியின் முன்னாள் கல்வித் தந்தை ஒருவர், தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு ‘சீமை’ கிராமத்தில் காரசாரமாய் கறிவிருந்து போட்டு அசத்தி இருக்கிறார். சுமார் ஆறாயிரம் பேர் பங்கேற்று ருசித்த அந்த விருந்து நடத்தப்பட்ட ஏரியாவைச் சுற்றி சுமார் பத்து கிலோ மீட்டர் ரேடியஸுக்கு கட்சிக் கொடிகள் கண்ணைப் பறித்தனவாம். விருந்துக்கான மொத்த செலவு 40 லகரமாம்.

கறிவிருந்து நிகழ்வின் போது, 80 கிலோவில் தயாரான ஸ்பெஷல் கேக்கை தலைவரின் வாரிசு கையால் வெட்டவைத்தார்களாம். விருந்தில் சொந்தக் கட்சி மட்டுமல்லாது பங்காளிக் கட்சி தலைகளும் பங்கேற்று ‘விழாவைச்’ சிறப்பித்தார்களாம். இதையெல்லாம் கூடவே இருந்து பார்த்த கட்சியின் சிட்டிங் எம்எல்ஏ கறிவிருந்துக்கு போட்டியாக தனது ‘குடி’ தொகுதியில் தலைவர் பிறந்த நாளுக்காக அடுத்த வாரமே மெகா மண்டபத்தை பிடித்து நளபாகப் போட்டிகளை நடத்தினாராம்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பேசும் தேசியக் கட்சி பார்ட்டிகள், “இந்த முறை சீட்டு நளபாகப் போட்டி நடத்துனவருக்கா... கறிவிருந்து வெச்சு கலக்குனவருக்கா” என்று வினாடி வினா நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in