Published : 14 Oct 2025 06:51 AM
Last Updated : 14 Oct 2025 06:51 AM
கரூர்: கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கை வாபஸ் பெற்றால் ரூ.20 லட்சம் தருவதாக திமுக ஒன்றியச் செயலாளர் கூறியதாக உயிரிழந்த பெண்ணின் சகோதரர் பேசும் வீடியோ அதிமுகவின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில்சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதில், கரூர் மாவட்டம் உப்பிட மங்கலத்தைச் சேர்ந்த கோகுலஸ்ரீ என்கிற சவுந்தர்யா, அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை ஆகாஷ், ஆகியோரும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, சிபிஐ விசாரணை கோரி கோகுலஸ்ரீயின் சகோதரர் பிரபாகரன், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதில், உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அதிமுகவின் எக்ஸ் பக்கத்தில், பிரபாகரன் 1 நிமிடம் 46 விநாடி பேசும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பிரபாகரன் பேசியுள்ளதாவது: செப்.27-ம் தேதி விஜய் பிரச்சார கூட்டத்துக்கு நான், என் தங்கை, மாப்பிள்ளை ஆகிய 3 பேரும் சென்றிருந்தோம். கூட்ட நெரிசலில் சிக்கி தங்கையும், மாப்பிள்ளையும் உயிரிழந்து விட்டனர்.
அவர்கள் எப்படி, இறந்தார்கள் என்றே தெரியவில்லை. அதற்காகதான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று வழக்கு தொடர்ந்தேன். திமுக தாந்தோணி ஒன்றியச் செயலாளர் ரகுநாதன் நேற்று முன்தினம் ரூ.20 லட்சம் பணம், வேலை வாங்கித் தருகிறோம். வழக்கை வாபஸ் வாங்கு என தெரிவித்தார்.
நான் பிறகு கூறுவதாக தெரிவித்து விட்டேன். தனியார் தொலைக்காட்சி செய்தியில் நேற்று நான் வழக்கு தொடரவில்லை என தெரிவிக்கின்றனர். நான் வழக்கு தொடர்ந்ததே தெரியாதது போல நடந்து கொள்கின்றனர்.
அதனால், இவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள் என தோன்றுகிறது. எனவே எனக்கும், என் தாய்க்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அதற்கு உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ள அதிமுக எக்ஸ் தள பதிவில், “இவர் தான் கரூர் சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டி வழக்கு தொடர்ந்த பிரபாகரன். இவரை திமுகவின் ஒன்றியச் செயலாளர் ரகுநாதன் தொடர்பு கொண்டு வழக்கை வாபஸ் வாங்க சொல்லி அழுத்தம் கொடுக்கிறார். இந்த விவகாரத்தில் திமுகவுக்கு சம்பந்தம் இல்லை என்றால், திமுக ஏன் இப்படி பதறுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT