

தேசிய ஜனநாயக கூட்டணி எம்ஜிஆர் ஆசியுடன் அமைந்த இயற்கையான கூட்டணி என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்றிரவு பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: மருதுபாண்டியரின் ஜம்பு பிரகடனம் போன்று திமுக ஆட்சியை விரட்டி, பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க காரைக்குடியில் பிரகடனம் செய்வோம். திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. காரைக்குடி நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ பாஜக மாவட்டத் தலைவர் அனுமதி கேட்டார். ஆனால், காவல்துறை அனுமதி தரவில்லை. இது குறித்து ஒரு போலீஸ் உயர் அதிகாரியை தொடர்பு கொண்டேன். அழைப்பை ஏற்கவில்லை. நியாயமான முறையில் நடக்கவில்லை என்றால் ஆட்சி மாற்றம் வந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் நிகழ்ச்சிக்கு கேட்ட இடத்தில் அனுமதி கிடைக்கிறது. ஆனால், எதிர்க் கட்சிகள் கேட்கும் இடத்தில் அனுமதி தருவதில்லை. அனுமதி மறுக்கப்பட்டதால்தான் கரூரில் 41 பேர் உயிரிழந்தனர். தமிழக அரசின் விசாரணை நியாயமாக இருக்காது. அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் தலையில் குட்டு வைத்துள்ளது. உயர் நீதிமன்றம் மீதும் கேள்வி எழுப்பியுள்ளது. நாங்கள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும் என்று கேட்டோம். தற்போது உச்ச நீதிமன்றம் மூலமே நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. கரூர் சம்பவத்துக்கு காரணமானோர் விரைவில் சிறைக்குச் செல்வர்.
தேசிய ஜனநாயக கூட்டணி இயற்கையான கூட்டணி, எம்ஜிஆர் ஆசிர்வாதத்தோடு அமைந்த கூட்டணி. சட்டப்பேரவைத் தேர்தலின்போது சிவகங்கை மாவட்டத்துக்கு பிரதமர் பிரச்சாரத்துக்கு வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் பாண்டித்துரை, அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக நயினார் நாகேந்திரனுக்கு பிள்ளையார்பட்டியில் பாஜக மாவட்டத் தலைவர் பாண்டித்துரை தலைமையில் அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.