

வால்பாறை: பொள்ளாச்சி அடுத்த வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதியில் உலா வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக வீடுகள் மற்றும் ரேஷன் கடைகளை உடைத்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி செல்வது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை வாட்டர் பால்ஸ் எஸ்டேட் அருகே ஊமையாண்டி முடக்கு பகுதியில் வனப்பகுதியை விட்டு
வெளியேறிய யானை கூட்டம், அங்குள்ள குடியிருப்புக்குள் நுழைந்தது. மாரிமுத்து என்பவரின் வீட்டின் ஜன்னல், கதவுகளை இடித்த நிலையில், உள்ளே இருந்த அவரது தாய் அசலா என்கிற அஞ்சலை (57) மற்றும் 3 வயது மகள் ஹேமாஸ்ரீ ஆகிய இருவரையும் காட்டு யானை தாக்கியுள்ளது. இதில் ஹேமாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அசலாவை, அருகில் இருந்தவர் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அசலா உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த வால்பாறை வனத்துறையினர், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், குடியிருப்புக்கு மத்தியில் இருந்த யானைகளை வனப்பகுதியில் விரட்டும் பணிகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குடியிருப்புக்குள் நுழையும் காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தி பொதுமக்கள் ஆழியாறு - வால்பாறை சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.