Published : 28 Aug 2018 06:37 PM
Last Updated : 28 Aug 2018 06:37 PM

திமுக கடந்து வந்த பாதையும், தலைவர் பதவியும் ஒரு பார்வை

 

திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். திமுக தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்றதும், திமுகவின் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றதும் ஒரு பார்வை. திமுக கடந்து வந்த நிகழ்வுகளும் ஒரு பார்வை.

திமுக என்ற கட்சி திராவிடர் கழகத்திலிருந்து 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி உருவானது. பெரியாரை எதிர்த்து திராவிடர் கழகத்திலிருந்து திமுக உருவானாலும் அது தோற்றுவிக்கப்பட்ட நாள் பெரியாரின் பிறந்த நாளான செப்.17 ஆகும்.

திமுக என்ற கட்சி 1949-ம் ஆண்டு சென்னை, பாரிமுனை பவழக்கார தெருவில் கே.கே.நீலமேகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அன்று திராவிடர் கழகத்தைக் கைப்பற்றி பெரியாரை வெளியேற்ற வேண்டும் என்ற பேச்சு எழுந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்து அறிக்கை விட்டார் அண்ணா.

“திகவைக் கைப்பற்றக்கூடிய வலிமையும், நியாயமும் நம்மிடம் இருந்தாலுங்கூட நாம் அவ்வழி செல்வது நாசமும் நர்த்தனம் செய்வதும், பாசத்திற்கும் பழமைக்கும் நம்மையறியாமல் இடந்தேடி கொடுத்திட நாம் ஆளாகிவிடுவோமோ என்று அஞ்சுகிறேன்.

கனி பறிக்க மரம் ஏறும்போது கருநாகம் காலைச்சுற்றிக் கொள்வதைப்போல பெரியாரிடமிருந்து கழகத்தை மீட்கும் சமயமாகப் பார்த்து அதைச் சாதகமாக ஆக்கிக்கொண்டு, பாசிசமும் பழமையும் மக்களை பிடித்தாட்டக்கூடும்.” என்று மறுத்து பெரிய அறிக்கையை வெளியிட்டார்.

அன்றைய கூட்டத்தில் பொதுக்குழு, அமைப்புக்குழு, சட்டத்திட்டக்குழு, நிதிக்குழு என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. அதை அன்று மாலை சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் நடந்த கூட்டத்தில் கொட்டும் மழையில் அண்ணா அறிவித்தார். கட்சியின் தலைவர் பதவி பெரியாருக்காக காலியாக இருக்கும் என்று அறிவித்த அண்ணா பொதுச்செயலாளராகப் பதவி ஏற்றார்.

அவரது அறிவிப்பில் முதற்கட்டமாக எழுத்துரிமை, பேச்சுரிமை அதை நசுக்கும் சர்க்காரை எதிர்த்து போராட திமுக தயாராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதன் பின்னர் குறுகிய காலத்தில் தமிழகம் முழுவதும் 7000 கட்சிக் கிளைகள் உருவாகின. பின்னர் திமுகவின் முதல் மாநில மாநாடு 1951-ம் ஆண்டு டிசம்பர் 13, 14,15, 16 தேதிகளில் சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ மைதானத்தில் நடந்தது. என்.வி.என் சோமுவின் தந்தை என்.வி.நடராசன் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.

அதன் பின்னர் 1954-ல் நெல்லையில் கருணாநிதி தலைமையில் இரண்டாவது மாநாடு நடந்தது. மூன்றாவது மாநாடு 1956-ல் திருச்சியில் நடந்தது. இதில்தான் நெடுஞ்செழியன் மாநாட்டுத் தலைவராக இருந்தார். இந்த மாநாட்டில்தான் அண்ணா, ‘தம்பி வா தலைமை ஏற்க வா’ என்று நெடுஞ்செழியனை அழைத்தார். இந்த மாநாட்டில் நெடுஞ்செழியன் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் 1957-லிலிருந்து 62-ம் ஆண்டுவரை நெடுஞ்செழியனே திமுகவின் பொதுச்செயலாளராக இருந்தார். மீண்டும் 1962-ல் பொதுச்செயலாளரான அண்ணா தாம் மறையும் வரை பொதுச்செயலாளராகவே நீடித்தார்.

திமுகவிற்குள் முதல் பிளவு 1961 ஏப்ரல் மாதம் நடந்தது. திமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலில் ஈவெகி.சம்பத் ( ஈவிகேஎஸ் இளங்கோவனின் தந்தை) கண்ணதாசன் உள்ளிட்டோர் வெளியேறினர். அவர்கள் தமிழ் தேசியக் கட்சி என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார்கள்.

பின்னர் திமுகவில் 1968-ல் அண்ணா மறைந்தபோது யார் அடுத்த முதல்வர் என்ற நிலையில் கருணாநிதியா? நெடுஞ்செழியனா? என்ற பூசல் எழுந்தது. நெடுஞ்செழியன் கட்சியின் மூத்த தலைவர், அண்ணா சிகிச்சைக்கு சென்றபோது முதல்வராகப் பொறுப்பு வகித்தவர் என்ற தகுதிகள் இருந்தும் தொண்டர்களை நெருங்காததால் கருணாநிதி எளிதாக முதல்வரானார்.

இதனால் கோபித்துக்கொண்ட நெடுஞ்செழியனை சமாதானப்படுத்த அவர் கட்சியின் பொதுச்செயலாளராகவும், கருணாநிதி முதல்வர் மற்றும் கட்சியின் தலைவராகவும் மாற்றப்பட்டனர். ஆனாலும் நெடுஞ்செழியன் அமைச்சரவையில் பங்கேற்க மறுத்து ஒதுங்கி நின்றார்.

அப்போதும் திமுகவில் பிளவு தோன்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நெடுஞ்செழியன், ‘கருணாநிதிமேல் தனக்கு மிகுந்த மரியாதை உண்டு அவர் முதல்வராவதில் பிரச்சினை எதுவும் இல்லை’ என்று அண்ணா நினைவு நாள் கூட்டத்தில் பேசி இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 1968-ல் பொதுச்செயலாளர் பதவி அதிகாரம் மிக்க பதவியாக இருந்தது. தலைவர் பதவி அதற்கு இணையாக இருந்தாலும் அது முடிவெடுக்கும் அளவுக்கு உள்ள பதவி இல்லை.

அண்ணாவின் மறைவுக்குப் பின் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்ற பின்னர் அவரது தலைமையில் ஆட்சி என்ற அதிகாரம் பின்னர் கட்சியிலும் அவரது தலைமை வலுவானதை அடுத்து தலைவர் பதவி முக்கியமான பதவியாகிப் போனது. தலைவர் பதவியில் இருந்த கருணாநிதிக்கு எதிராக நடந்த எம்ஜிஆர் 1972-ல் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இது திமுகவில் ஒரு முக்கியப் பிளவாக பின்னாளில் அமைந்தது. 1972- அக்டோபரில் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினார். அவர் கட்சித் தலைவர் பதவியை அண்ணாவுக்காக வெறுமையாக வைத்து பொதுச்செயலாளராகப் பதவி ஏற்றார். அதனால்தான் அதிமுகவில் தலைவர் பதவி கிடையாது. அவைத்தலைவர் என்ற பெயருக்கு கூட்டம் நடத்த பதவி உண்டு.

1973-க்குப் பிறகு 1993-ல் வைகோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். திமுகவில் மற்றொரு பிளவு என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மதிமுக என்ற கட்சியைத் தொடங்கிய வைகோ 1996- தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அவருடன் சென்றவர்களில் பெரும்பாலானோர் பின்னர் திமுகவுக்குத் திரும்பினர்.

அதன் பின்னர் திமுகவுக்குள் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து மு.க.அழகிரி வெளியேற்றப்பட்டார். தற்போது செப்.5-ல் தனது ஆதரவாளர்களை வைத்து பேரணி நடத்த திட்டமிட்டுள்ள அழகிரி, தன்னை திமுகவில் இணைக்காவிட்டால் திமுக பெரும் அழிவைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திமுகவின் இரண்டாவது தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். கட்சியில் 1965-ல் மாணவர் அமைப்பைத் தொடங்கி அடியெடுத்து வைத்த ஸ்டாலின் நீண்ட அனுபவம் மிக்கவர். கட்சிக்குள் படிப்படியாக முன்னேறிய ஸ்டாலினை திமுகவில் அதன் தலைவர் கருணாநிதி எளிதில் அங்கீகரிக்கவில்லை. 1965-ல் கட்சிக்குள் வந்தாலும், 1975-ல் மிசாவில் ஓராண்டு அடைப்பட்டாலும் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது 1984 சட்டப்பேரவை தேர்தலில் தான்.

1984-ல் ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வியுற்றார். பின்னர் 1989 தேர்தலில் அவர் ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை தேர்தலில் வென்றாலும் சாதாரண எம்.எல்.ஏவாக மட்டுமே இருந்தார். 1996-ல் மீண்டும் திமுக ஆட்சி அமைத்தாலும் அதில் அவர் இடம்பெறவில்லை.

முதன்முறையாக சென்னை மேயராகத் தேர்வு செய்யப்பட்டார். நான் அவருக்குத் தந்தை அல்ல, இந்த மாநகரின் தந்தை என்ற முறையில் எனக்கு தந்தை என்று அவரை கருணாநிதி புகழும் அளவுக்கு நடந்துகொண்டார். மேயராக இருந்தபோது வார்டு தோறும் ஸ்டாலின் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டம் சிறப்பாகப் பேசப்பட்டது.

அதன் பின்னர் ஸ்டாலினுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது 2006 திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் உள்ளாட்சி அமைச்சராகவும் பின்னர் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார். துணை முதல்வராக ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டார். இதன் மூலம் தான் சிறந்த நிர்வாகி என்று பெயரெடுத்தார்.

2016 சட்டப்பேரவை தேர்தலில் நமக்கு நாமே பயணம் மூலம் திமுகவை வெற்றிக்கு மிக அருகில் அழைத்து வந்த ஸ்டாலின் 88 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் தமிழகத்தின் பெரிய எதிர்க்கட்சியாக எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். தற்போது திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிபெற்றால் முதல்வராக வருவார்.

திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற பின் ஸ்டாலின் தனது மிகச்சிறப்பான ஏற்புரையின் மூலம் திமுக எப்போதும் மதச்சார்பற்ற அரசியல் பக்கம் தான், சமூக நீதிக் கட்சியாக திமுக நீடிக்கும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியதன் மூலம் திமுக பாஜக உறவு என்கிற சமீப கால வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x