Published : 14 Oct 2025 05:44 AM
Last Updated : 14 Oct 2025 05:44 AM
புதுச்சேரி: சென்னை மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் இடையே ரூ.600 கோடியில் அமையவுள்ள 6 வழிச்சாலைக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். புதுச்சேரியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ராஜீவ் காந்தி - இந்திரா காந்தி சிக்னல்களை இணைக்கும் வகையில் ரூ.436 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் பேசியதாவது: உலக அளவில் சிறந்த தொழில்நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தியதன் மூலம், நம் நாட்டின் நெடுஞ்சாலை இணைப்பு உலகத்தில் முதலிடத்தில் இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள நகராட்சிகளில் உருவாகும் குப்பைகளை மறுசுழற்சி செய்து, சாலைகள் போடுவதற்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே டெல்லியில் குப்பையை பயன்படுத்தி சாலைகள் போடப்பட்டுள்ளன.
இதுவரை சாலை உருவாக்கத்தில் 18 லட்சம்டன் கழிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, சாலைகள் போடுவதற்காக ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் மணல் எடுப்பதால் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படுகிறது. மத்திய நீர்வளத் துறை அமைச்சராக நான் இருந்தபோது, மாநிலங்களுக்கு இடையே நீர் பங்கீடு தொடர்பாக 24 வழக்குகள் நிலுவையில் இருந்தன. கலந்தாய்வு கூட்டம் நடத்தி 17 வழக்குகளில் தீர்வு ஏற்பட்டது.
தமிழகம் - கர்நாடகம் இடையிலான நீர் பிரச்சினையைத் தீர்க்க அரசியல்ரீதியாக உறுதியான முடிவு எடுக்கும் நிலை வேண்டும். உலக அளவில் நம் நாடு பொருளாதார வளர்ச்சியில் 4-வது இடத்தில் இருக்கிறது. இதை 3-வது இடத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் பிரதமர் மோடி பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.
கடந்த 2014-ம் ஆண்டில் ரூ.14 லட்சம் கோடியாக இருந்த ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி 2025-ம் ஆண்டில் ரூ.22 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நம் நாட்டில் வாகன உற்பத்தியில் தற்போது 30 சதவீதம் பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஹைட்ரஜன் அடிப்படையில் இயங்கும் இன்ஜினை அடிப்படையாகக் கொண்டதாக எதிர்காலம் இருக்கும். அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் துறையாக இது இருக்கும்.
தமிழகத்தில் இருந்து இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் இருந்து 50 சதவீத வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே அமைக்கப்பட்டு வரும் 4 வழிச்சாலை பணியில் 10 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்தச் சாலை பயன்பாட்டு வந்தால் சென்னை நகரம் மிகுந்த பயன் பெறும்.
சென்னை - பெங்களூரு விரைவு சாலையால் 2 மணி நேரத்தில் பெங்களூரு செல்ல முடியும். இதைத்தவிர ரூ.600 கோடி மதிப்பில் மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூருக்கு இடையிலான 6 வழிச்சாலைக்கு ஜனவரி 2026-ல் ஒப்புதல் அளிக்கப்படும். இதன் மூலம் சென்னை துறைமுகத்துக்கு இணைப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் முருகன், புதுவை துணைநிலை ஆளுநர்கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், நமச்சிவாயம் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT