Published : 09 Aug 2018 11:09 AM
Last Updated : 09 Aug 2018 11:09 AM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து பேச்சு: ஜெனிவாவிலிருந்து திரும்பிய திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது

தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினை 100 நாட்கள் போராட்டமாக நடந்தது. 100 வது நாள் நிகழ்ச்சியில் பேரணியாக கலக்டர் அலுவலகம் நோக்கி மக்கள் பெருந்திரளாக சென்றனர்.

அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர், 50 பேர்வரை காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டவிதம் குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. தேசிய அளவில் இப்பிரச்சினை எதிரொலித்தது. தற்போது துப்பாக்கிச்சூடு குறித்த வழக்கும் நடைப்பெற்று வருகிறது.

திருமுருகன் காந்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் பதிவு செய்ய ஜெனிவா சென்றார். அங்கு அவர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பேசினார்.

இதையடுத்து அவரை கைது செய்ய லுக் அவுட் நோட்டீஸ் தமிழக போலீஸாரால் கொடுக்கப்பட்டிருந்தது. ஐநா கூட்டத்தில் கலந்துக்கொண்டு விட்டு சென்னை திரும்ப இருந்தார். அதற்கு முன் ஞாயிறு அன்று பெங்களூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கான ஏற்பாடுகளை கவனிக்க திருமுருகன் காந்தி ஜெனிவாவிலிருந்து பெங்களூர் விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் வந்து இறங்கினார். அப்போது அவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது செய்துள்ளதாகவும், மத்தியஅரசு மற்றும் மாநில அரசின் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக மே.17 இயக்கம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x