கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நிதியுதவி

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நிதியுதவி
Updated on
1 min read

கரூர்: கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 50,000 வீதம் விசிக சார்பில் நிதி உதவியை நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று வழங்கினார்.

இந்த நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி, விசிக திருச்சி மண்டல செயலாளர் தமிழாதன்,மேலிட பொறுப்பாளர் வேலுசாமி, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி, கரூர் மாநகர மாவட்ட செயலாளர் கராத்தே இளங்கோவன், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் என்கிற ஆற்றலரசு, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகாமுனி‌ உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், “இன்று கரூர் மாவட்டத்தில் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரில் 40 பேர் குடும்பங்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலா ரூ.50,000 நிதி உதவி ரூ 20 லட்சம், வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு நபருக்கு அவர் வர இயலாத காரணத்தினால் நேரில் சென்று அவருக்கு ரூ 50,000 வழங்கப்பட உள்ளது.

கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்திற்கு தமிழக அரசு விரைந்து மருத்துவ உதவி செய்து கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ 10 லட்சம் நிவாரண உதவி வழங்கி துரிதமாக செயல்பட்டது குறிப்பாக தமிழக முதல்வர் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டார் என்பதை நாடறியும்.

உச்ச நீதிமன்றத்தில் தவெக சார்பில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை கோரிய வழக்கு தொடுத்திருக்கிறது. நேற்றைய விசாரணையில், உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருக்கும் போது, ஏன் சென்னை உயர் நீதிமன்றம் வேறொரு வழக்கை விசாரணை செய்தது என்பது குறித்து விளக்கங்கள் மட்டுமே கேட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், நீதிபதி தனது அதிகார எல்லைக்கு உட்பட்டு விசாரணை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் எந்த தலையீடும் இல்லை. நீதித்துறையும் சுதந்திரமாக செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

செந்தில் பாலாஜி எந்த கட்சி என்று பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கவும் அரசின் நிவாரணத் தொகை கிடைக்கவும் பங்களிப்பு செய்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சிறிதளவு பங்களிப்பு செய்ய வேண்டும் துயரத்தில் உள்ளவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என்பதால் இன்று நிவாரண தொகை வழங்கி உள்ளது.” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in