

சென்னை: தமிழ்நாடு போராடும் என்பது திமுகவின் கற்பனையான போராட்ட முன்னெடுப்பு என்று தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "'எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது' என்று 'இளவரசர்' உதயநிதி ஸ்டாலின் இறுமாப்புடன் பேசி இருக்கிறார். ஹிட்லர், முசோலினி போல பேசுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளைத் தந்து வீடு வீடாக வாக்கு பிச்சை கேட்டதை மறந்துவிட்டு, ஒட்டுமொத்த தமிழக மக்களையும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களையும் அடிமைகள் என்று உதயநிதி பேசி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இடம்பெற வேண்டும் என்ற தமிழக மக்களின் எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தவெகவினர் தங்கள் கட்சிக் கொடிகளுடன் பரவலாக கலந்து கொண்டது திமுகவினருக்கு அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் 19 மாநிலங்களில் ஆட்சி நடத்தி வரும் பாஜகவை ‘பாசிச பாஜக’ என்று கூற உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதியில்லை. பாசிசத்தின் இலக்கணம் திமுகதான் என்பதை கடந்த கால வரலாறு சொல்லும்.
'தமிழ்நாடு போராடும்' என்பது திமுகவின் கற்பனையான போராட்ட முன்னெடுப்பு. இதைத்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்து, ‘தமிழ்நாடு யாருடன் போராடும்’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரது கேள்விக்கு நேரிடையாகப் பதில் சொல்ல முடியாத உதயநிதி ஸ்டாலின், பாஜகவுக்கு எதிராகவும் ஆளுநருக்கு எதிராகவும் அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். திமுகவின் இத்தகைய பேச்சுக்கள் ‘பூமராங்’ போல அக்கட்சியையே தாக்கும்.
தமிழகத்தில் தொடரும் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, அனைத்து துறைகளிலும் ஊழல், அரசியல் படுகொலைகள், லாக்கப் படுகொலைகள், கஞ்சா நகரங்களாக மாறும் தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்கள், கள்ளச்சாராய சாவுகள், போதை கலாச்சாரம், பாலியல் வன்கொடுமை குற்றங்கள் என சிதைந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டை மீட்க, திமுக ஆட்சியை வீழ்த்த தமிழக மக்கள் களத்தில் இறங்கிவிட்டனர்” என தெரிவித்துள்ளார்.