

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து உத்தரவு பிறப்பிப்பதை நிறுத்தி வைத்துள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் செப்.27-ல் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 வயது குழந்தை, பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 8-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை தமிழக காவல் துறையினர் விசாரித்தால் உண்மை வெளிவராது என்றும், எனவே உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து பாஜகவின் உமா ஆனந்தனும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள், நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தவெக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுப்ரமணியம், “எங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்காமலேயே, உயர் நீதிமன்றம் கருத்துகளை முன்வைத்துள்ளது. சம்பவம் நடைபெற்றதும் விஜய் தப்பித்து ஓடியதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியது தவறு. காவல் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல் அடிப்படையிலேயே விஜய் கரூரில் இருந்து வெளியேறினார். விஜய் அங்கு இருப்பது மேலும் சிக்கலுக்கு வழிவகுக்கும் என அதிகாரிகள்தான் கூறினர். காவல் துறையின் பாதுகாப்புடன்தான் விஜய் அந்த இடத்தில் இருந்து வெளியேறினார். பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க தவெக நிர்வாகிகளை காவல் துறையினர் அனுமதிக்கவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காவல் துறையின் சிறப்பு விசாரணைக் குழுவை நாங்கள் ஏற்கவில்லை. உச்ச நீதிமன்றமே சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கட்டும். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரணையை மேற்பார்வையிடட்டும். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு பதில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது ஏன்?” என வாதிட்டார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என கோரிய வழக்கில் மதுரை அமர்வு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. சென்னை அமர்வு இதனை விசாரிப்பதை மேற்கோள் காட்டி, அங்கு முறையீடு செய்ய அறிவுறுத்தியது. ஒரே வழக்கில் இரு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட இதுதான் காரணம்.
உயர் நீதிமன்றம்தான் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. குழுவில் உள்ள அதிகாரிகளை சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லை. அஸ்ரா கர்க், சிபிஐயிலும் பணியாற்றியுள்ளார். அவர் நல்ல அதிகாரி” என தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் பி.வில்சன் ஆஜராகி, விஜய் திட்டமிட்ட நேரத்தில் பிரச்சாரத்துக்கு வராததே அசம்பாவிதம் நிகழக் காரணம் என வாதிட்டார்.
கரூர் கூட்ட நெரிசலில் தனது மகனை இழந்த பன்னீர்செல்வம் பிச்சைமுத்து சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேஷாத்ரி நாயுடு, இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி, “அசாதாரண சூழ்நிலையில் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வழக்கமான விஷயங்களுக்கு சிபிஐ விசாரணை கூடாது. சிறப்பு விசாரணைக் குழு தனது கடமையில் இருந்து தவறினால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடலாம்” என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதை ஒத்திவைத்தனர்.