

திமுக தலைவர் கருணாநிதி மறைவு இந்திய அரசியலுக்கு மிகப்பெரிய இழப்பு என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நலக்குறைவால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.
திமுக தலைவர் மு. கருணாநிதியின் மறைவுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், ''திமுக தலைவர் கருணாநிதி பன்முகத் திறமைகள் கொண்ட தலைவர். ஏழைகளுக்கும், சாமானியர்களுக்கும் அர்ப்பணிப்புடன் சேவை செய்தவர். சமூகத்தில் விளிம்புநிலையில் இருக்கும் மக்களுக்காக ஓங்கி குரல் கொடுத்தவர் கருணாநிதி. கருணாநிதியின் மறைவுக்கு தேசமே அஞ்சலி செலுத்துகிறது.
கருணாநிதியின் மறைவு இந்திய அரசியலுக்கு மிக முக்கியமான பேரிழப்பாகும். தமிழ் சமூகமும், தமிழ்நாடும் எப்போதும் அவரை நினைவில் வைத்திருக்கும். கருணாநிதியின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவிக்கிறேன்'' என்று ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.