வட சென்னையின் முக்கிய ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்

நாகேந்திரன்
நாகேந்திரன்
Updated on
1 min read

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருந்த முக்கிய ரவுடி நாகேந்திரன் நேற்று காலை உடல்நலக் குறைவால் உரிழந்தார். சென்னை வியாசர்பாடியை பூர் வீகமாகக் கொண்டவர் நாகேந்திரன் (52). இவருக்கு உஷா மற்றும் விசாலாட்சி என்ற இரு மனைவிகள். 3 பிள்ளைகள் உள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான மூத்த மகன் அஸ்வத்தாமன் காங்கிரஸ் கட்சியின் மாணவரணி முன்னாள் தலைவராகவும் இருந்தார். 2-வது மகன் அஜீத்ராஜ் பாஜக-வில் பொறுப்பில் உள்ளார். 3-வது மகள் ஷாலினி. நாகேந்திரன் ஆரம்ப காலத்தில் ரவுடி வெள்ளை ரவியுடன் இருந்தார்.

அப்போது வியாசர்பாடி ரவுடியான சேராவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரது வலதுகரமான சுப்பையா என்பவரை வெள்ளை ரவியுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்றார். இதில் உயிர் தப்பிய சுப்பையாவை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை செய்தார்.

அதோடு கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டபோது, தொழில் போட்டியிலும் ஒருவரைக் கொலை செய்து சிறை சென்று திரும்பினார். இந்த கொலை தொடர்பாக அதிமுக பேச்சாளரான ஸ்டான்லி சண்முகம் என்பவர் மேடையில் பேசினார். இதனால் அவரை 1997-ம் ஆண்டு வியாசர்பாடியில் வீடு புகுந்து கொலை செய்தார். இந்த வழக்கில் நாகேந்திரனுக்கு 1999-ம் ஆண்டில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டும் என 2003-ல் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்பின் புழல் சிறையில் இருந்து கொண்டே, கட்டப்பஞ்சாயத்து, கொலை, ஆள்கடத்தல், செம்மரக் கடத்தல் போன்றவற்றுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்தார். அத்துடன், வடசென்னையையும் தனது ஆட்கள் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்தாண்டு பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இதற்கு மூளையாக செயல்பட்டதாக, சிறையில் இருந்த நாகேந்திரன் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது மகனான அஸ்வத்தாமன் உட்பட 27 பேர் கைதாகினர்.

இந்நிலையில்தான் அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நாகேந்திரன் நேற்று காலை 10.30 மணியளவில் உயிரிழந்தார். சுமார் 35 ஆண்டுகளாக ரவுடியாக வலம் வந்த இவர் மீது 5 கொலை, 12 கொலை முயற்சி, மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 26 குற்றவழக்குகள் உள்ளது குறி்ப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in