என்னைப் பற்றிய அரசியல் அவதூறுகளை நம்ப வேண்டாம்: தவெக நிர்வாகி ராஜ்மோகன்

என்னைப் பற்றிய அரசியல் அவதூறுகளை நம்ப வேண்டாம்: தவெக நிர்வாகி ராஜ்மோகன்
Updated on
1 min read

சென்னை: “என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறு, வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கரூர் துக்க சம்பவம் குறித்து தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்திய அளவில் பேசுபொருளானது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் மீதும், தொண்டர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில், கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நபர்களின் உறவினர்களிடம் தவெக தலைவர் விஜய் கடந்த 2 நாட்களாக வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்து வருகிறார்.

இதனிடையே, இது குறித்து தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தனது எக்ஸ் தளத்தில், “வேதனையில் இருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது. அதே சமயம் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி.

இந்த அமைதியை பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம். அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும். நீதிக்கான முன்னெடுப்புகள் நெடியது. பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்க பயணிப்பதும் அவர்களுக்கு நீதி பெற்றுதருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. அதில் கவனம் செலுத்துவோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in