அரசு தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள்: பிரதமர் மோடிக்கு இபிஎஸ் வாழ்த்து

பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்.
பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: அரசு தலைமைப் பதவிகளில் தொடர்ந்து 25 ஆண்டுகளாகப் பணியாற்றும் பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வராகவும், பின்னர் பிரதமராகவும் தொடர்ந்து 25 ஆண்டுகள் அரசின் தலைமைப் பதவியில் இருந்து வருகிறார். இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “25 ஆண்டுகளாக அரசின் தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வரலாற்றுச் சாதனை படைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த இணையற்ற மைல்கல், உங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அரசியல் சாதுர்யம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், தேசத்திற்கு நேர்மையுடன் சேவை செய்வதற்கும் உள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2001 அக்டோபர் 7-ம் தேதி குஜராத் முதல்வராக முதல் முறையாக தலைமைப் பதவியை ஏற்றார் பிரதமர் மோடி. அதன் பிறகு தொடர்ந்து 3 முறை 12.5 ஆண்டுகள் குஜராத் முதல்வராக இருந்த அவர் 2014-ல் பிரதமர் ஆனார். அதன் பிறகு தொடர்ந்து 3 முறையாக பிரதமர் பதவியில் மோடி நீடிக்கிறார். இதனையடுத்து அவர் அரசின் தலைமைப் பதவியில் தனது 25-ம் ஆண்டை தொடங்குகிறார்.

இது தொடர்பாக நேற்று பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “2001 ஆம் ஆண்டு இந்த நாளில், நான் முதல் முறையாக குஜராத்தின் முதல்வராக பதவியேற்றேன். எனது சக இந்தியர்களின் தொடர்ச்சியான ஆசிர்வாதங்களுக்கு நன்றி, நான் ஒரு அரசின் தலைவராக 25 வது ஆண்டில் நுழைகிறேன். இந்திய மக்களுக்கு எனது நன்றி. இத்தனை ஆண்டுகளாக, நமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், நம் அனைவரையும் வளர்த்த இந்த மாபெரும் தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும் நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in