Last Updated : 10 Apr, 2014 09:29 AM

 

Published : 10 Apr 2014 09:29 AM
Last Updated : 10 Apr 2014 09:29 AM

அரசு பஸ் விபத்துகளால் பறிபோகும் உயிர்கள்: இழப்பீட்டுக்காக ஆண்டுக்கணக்கில் அலையும் குடும்பங்கள்; இன்சூரன்ஸ் இல்லாத அவலம்- அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

திருவண்ணாமலை தேனிமலை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதியதில் டூவீலரில் சென்ற கலைவாணி (30), அவரது மகன் விஷ்ணு (5) மற்றும் சுமன் (5) ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கலைவாணியின் மகள் நந்தினி (6) படுகாயமடைந்தார். ஓடும் பஸ்ஸில் டிரைவருக்கும் கண்டக்டருக்கும் ஏற்பட்ட மோதலால் இந்த விபரீதம் நடந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய டிரைவர் கிருஷ்ணனை (40) போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டிரைவரின் அலட்சியத்தால்தான் விபத்து நடந்துள்ளது. அதனால் டிரைவரையும் கண்டக்டரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஆண்டுக்கு 400 பேர் பலி

தமிழகத்தில் அரசு பஸ்கள் மோதி ஆண்டுக்கு சுமார் 400 பேர் வரை உயிரிழக்கின்றனர். விபத்து ஏற்படுத்தும் அரசு பஸ் டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அதனால்தான் விபத்துகள் தொடர்வதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க (சிஐடியு) தலைவர் எம்.சந்திரன் கூறியதாவது: விபத்து ஏற்படுத்தும் அரசு டிரைவர்கள் மீது சமீபகாலமாக நீதிமன்றங்களும் நிர்வாகமும் அதிக நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால், தமிழகத்தில் தற்போது அரசு பஸ்கள் ஏற்படுத்தும் விபத்துகள் குறைந்துள்ளன. உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுவதில்லை. விபத்துகளுக்கு அரசு பஸ் டிரைவர்களை மட்டும் காரணமாக சொல்ல முடியாது. சாலை விதிகளை மீறி செல்லும் மற்ற வாகனங்களாலும் விபத்து நடக்கிறது. ஆனால், திருவண்ணாமலையில் நடந்த விபத்துக்கு டிரைவரின் அலட்சியமும் அஜாக்கிரதையும்தான் முழுக்க காரணம்.

விபத்து ஏற்படுத்தும் அரசு பஸ் டிரைவர்கள், காவல் நிலையத்திலேயே சொந்த ஜாமீனில் விடப்படுகின்றனர். முதல்முறை உயிர்ப்பலி ஏற்படுத்தும் அரசு பஸ் டிரைவர்களுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை அளிக்கிறது. அவர்களுக்கு நிர்வாகமும் 2, 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வை நிறுத்துகிறது. சஸ்பெண்ட் போன்ற நடவடிக்கையையும் எடுக்கிறது. இரண்டாவது முறையாக உயிர் பலி ஏற்படுத்தும் விபத்து நடந்தால் சம்பந்தப்பட்ட டிரைவரை பணிநீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிடுகிறது. சிறிய விபத்து என்றால் பஸ்ஸுக்கான சேதார செலவு, டிரைவரின் சம்பளத்தில் பிடிக்கப்படுகிறது. 10-க்கும் மேற்பட்ட சிறிய விபத்துகளை ஏற்படுத்தும் டிரைவர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். பஸ்ஸில் இருந்து யாராவது கீழே விழுந்துவிட்டால், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இன்சூரன்ஸ் இல்லை

அரசு போக்குவரத்துக் கழக பஸ்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படுவதில்லை. எங்காவது ஒரு இடத்தில், எப்போதாவதுதான் அரசு பஸ் விபத்து நடக்கிறது. இதற்காக அனைத்து பஸ்களுக்கும் இன்சூரன்ஸ் கட்டினால், போக்குவரத்துக் கழங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என நிர்வாகத் தரப்பில் கூறப்படுகிறது. அரசு பஸ் மோதி உயிரிழப்பவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைவோருக்கு இழப்பீட்டுத் தொகையை தாங்களே வழங்குவதாக போக்குவரத்துக் கழகங்கள் தெரிவித்துள்ளன.

அலையும் குடும்பங்கள்

ஆனால், அரசு பஸ் விபத்துகளால் பாதிக்கப்படும் குடும்பங்கள், இழப்பீடு கேட்டு நீதிமன்றம் சென்றால், வாய்தா என்ற பெயரில் பல ஆண்டுகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஒருவழியாக வழக்கு முடிந்து நீதிமன்றம் இழப்பீட்டுத் தொகையை அறிவித்தாலும், போக்குவரத்துக் கழகங்கள் உடனடியாக அதை வழங்குவதில்லை. 5, 10 ஆண்டுகள் காலதாமதம் செய்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள், மீண்டும் நீதிமன்றத்தை நாடும்போது, சம்பந்தப் பட்ட போக்குவரத்துக் கழக பஸ்ஸை ஜப்தி செய்ய உத்தரவிடப்படுகிறது. அதன்பிறகே இழப்பீட்டுத் தொகையை வழங்கிவிட்டு, பஸ்ஸை நிர்வாகம் மீட்டுச் செல்கிறது. நீதிமன்றம் சொல்லும் இழப்பீட்டுத் தொகையை, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு சந்திரன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக போக்குவரத்து துறை முக்கிய அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘நான் தற்போது பிஸியாக இருக்கிறேன். என்னால் ஒன்றும் பேச முடியாது’’ என்று கூறிவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x