Published : 06 Oct 2025 03:01 PM
Last Updated : 06 Oct 2025 03:01 PM
சென்னை: வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பின்புலம் குறித்து சமூக வளைதளத்தில் மோசமாக விமர்சிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
யூடியூப் மற்றும் சமூக வளைதளங்களில் கிறிஸ்டில்லா பதிவிட்ட வீடியோ மற்றும் கருத்துகளை நீக்கக் கோரி சமையல்கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், 'ஆடை வடிவமைப்பாளர் கிறிஸ்டில்லா, தனக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாக யூடியூப் மற்றும் சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அதனால், அவரது கருத்துக்களை யூடியூப்களில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாதம்பட்டி ரங்கராஜன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "சமையல் கலை நிபுணர் ரங்கராஜன், ஸ்ருதி என்பவரை கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். தொழிலில் வளர்ச்சியடைந்த நிலையில் ஆடை வடிவமைப்பாளரான கிறிஸ்டில்லாவுடன் தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கிறிஸ்டில்லாவுக்கு கோபம் ஏற்பட்டது.
இதையடுத்து தன்னை ஏமாற்றி விட்டதாகவும், மோசம் செய்து விட்டதாகவும் கிறிஸ்டில்லா பேட்டி மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால், சமூகத்தில் ரங்கராஜனுக்கு இருந்த நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. தொழிலில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாகவும் தனியாக வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது” என்று வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், "ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்காக நீதிபதிகள் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்படுகின்றனர். அவர்களின் செயல்பாடுகளுக்கு கலர் சாயம் பூசப்படுகிறது. குடும்பத்தினர் மற்றும் பின்புலங்கள் விமர்சிக்கப்படுகிறது. சமூக வளைதளங்களில் அவர்களுக்குத் தேவையானதை எழுதுவார்கள். அதை நாம் கவனத்தில் கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும். சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வருபவர்கள் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது இயல்பானது.
கிறிஸ்டில்லா குற்றச்சாட்டு குறித்து மாதம்பட்டி ரங்கராஜன் ஆதாரங்களுடன் மறுக்க முடியுமா? அனைத்துக்கும் ஆதாரங்கள் உள்ளதா? தொடர்புக்கான காரணங்களை மறுக்க முடியுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, கிறிஸ்டில்லா தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.22-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT