“ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும்” - தவெக மீது பிரேமலதா கடும் விமர்சனம்

“ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும்” - தவெக மீது பிரேமலதா கடும் விமர்சனம்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும். வீரம் இருக்க வேண்டும். நம்மால் ஒரு குடும்பத்துக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்க வேண்டும். விஜய் குறித்த நேரத்தில் அங்கு வரவே இல்லை. இது அவர் செய்த முதல் தவறு என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: “தவெக நிர்வாகிகள் தலைமறைவாக இருப்பதாக சொல்கிறார்கள். தலைக்கு கத்தியா வரப்போகிறது? தூக்கிலா போடப் போகிறார்கள்? ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும். வீரம் இருக்க வேண்டும். நம்மால் ஒரு குடும்பத்துக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்க வேண்டும். விஜய் குறித்த நேரத்தில் அங்கு வரவே இல்லை. இது அவர் செய்த முதல் தவறு. உங்களை பார்க்கத்தானே குழந்தைகளை வைத்துக் கொண்டு தாய்மார்கள் உட்பட அனைவரும் காலை முதல் சாலையில் நிற்கிறார்கள். அந்த பொறுப்பு வேண்டாமா?

7 மணிக்கு நிகழ்ச்சி என்றால் 7 மணிக்கு அங்கு இருக்க வேண்டும். நீங்கள் வீட்டில் இருந்தே தனி விமானத்தில்தான் வருகிறீர்கள். விஜயகாந்த் 150 படங்கள் நடித்துள்ளார். படப்பிடிப்புக்கு அவர்தான் மேக்கப் உடன் முதல் ஆளாக வந்து நிற்பார். இந்த கடமை உணர்வை தவறுவிட்டிருக்கிறார் விஜய். அவர் படப்பிடிப்புக்கு சரியாக போய்விடுவார். ஆனால் அரசியலுக்கு இப்போதுதான் வந்திருக்கிறார். ஏன் அரசாங்கத்தையும், காவல்துறையும் நம்பி நீங்கள் போகிறீர்கள்? உங்களை நம்பி வந்த மக்களுக்கு நீங்கள் என்ன பாதுகாப்பு கொடுத்தீர்கள்? உங்களை நம்பி வரும் தொண்டர்களுக்கு தண்ணீர், உணவு கொடுக்க வேண்டாமா? இது அவர் செய்த அடுத்த தவறு. ஏதோ கூண்டுக்குள் புகுந்து கொள்வதை போல பேருந்துக்குள்ளேயே இருக்கிறார். உங்கள் அண்ணன் விஜயகாந்த் செய்த விஷயங்களை கற்றுக் கொண்டு செய்யுங்கள் விஜய்” இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in